Tuesday, January 5, 2016

GPS தொழில் நுட்பம் உலக நாடுகளின் மேல் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை அதிகரிக்குமா??


ஜி பி எஸ் தொழில் நுட்பமானது தற்போது பலவகைத் தேவைகளிற்கும் பயன்படுத்தப்படும் ஒன்றாகும்கடலில் செல்லும் கப்பல்கள் தொடக்கம் வீதியில்  செல்லும் வாகனங்கள் வரை தங்களது பாதையை அடையாளங்கண்டு கொள்வதற்காக இதனைப் பயன்படுத்திக் கொள்கின்றனசிறப்பான செயற்பாடுஇலவச சேவைமற்றும் இலகுவான பயன்பாட்டுக்குரிய பயனர் இடைமுகம் என்பன இதன் பாவனையை சாதாரண மக்கள் மத்தியிலும் அதிகரித்துள்ளது.
GPS இன் பாவனையானது வீதி நகர்வுகள் மட்டுமல்ல இராணுவ, புலனாய்வுத்துளை மற்றும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களிற்கு முதுகெலும்பாய் அமைகின்றது.
இவையெல்லாம் நன்றாகத் தான் இருக்கின்றன. தற்பொழுது எழுந்துள்ள சிக்கல் என்னவென்றால் 3ம் தலைமுறை  ஜி பி எஸ்  (GPS) தொழில்நுட்பத்தில் அமெரிக்கா தன் மேலாதிக்கத் தன்மையை அதிகரிப்பது தான் தற்பொழுது எழுந்துள்ள சிக்கல். அதாவது இரண்டாம் தலைமுறை ஜி பி எஸ் தொழில்நுட்பத்தில் பாவனையாளரைக் கட்டுப்படுத்தும் வசதி இல்லை. இதன் காரணமாக அமெரிக்காவினால் எதனையும் கட்டுப்படுத்த முடியாத ம சூழ்நிலை காணப்படுகின்றது. மேலும் அமெரிக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே அமெரிக்கா விற் கெதிராக பல்வேறு தாக்குதல்களைத் திட்டமிட பலருக்கும் உதவியது வ்  ஜி பி எஸ் தொழில்நுட்பம்.
இதன்காரணமாக பல்வேறு பாவனையைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்களுடன் தயாராகின்றது ஜி பி எஸ் 3. இதன் காரணமாக அமெரிக்கா பல நிபந்தனைகளை அதன் பாவனை நாடுகளிடம் நிர்பந்திக்க முடியும்.
எனினும் இவ்வாறான நிலமை ஏற்படும் என்பதனை ஆரம்பத்திலே அறிந்து கொண்ட சில விண்வெளி வலுக்கொண்ட நாடுகள் தங்களுக்கு உரித்தான பிராந்திய அமைவிட வழிகாட்டிப் பொறிமுறைகளை ஏற்படுத்துவதற்கான நடைமுறைகளைத் தொடங்கி விட்டன அவையாவன:

GNOLSS : ரஸ்சியா
Galileo: ஐரோப்பிய ஒன்றியம்
Beidou & COMPASS: சீனா
IRNSS: இந்தியா
QZSS: ஜப்பான்

எனினும் விண்வெளி வலு இல்லாத இலங்கை போன்ற நாடுகளின் நிலை? அமெரிக்காவிடமோ இல்லை இந்த பிராந்திய விண்வெளி வலுமிக்க நாடுகளிடமோ சரணாகதியடைவதைத் தவிர வேறுவழியில்லை.

எவ்வாறு புவியைக் கண்காணிக்கின்றன?

செய்மதிகளில் பல வகையான செய்மதிகள் உள்ளன. பொதுவாக அவை பின்வருமாறு வகைப்படுத்த முடியும்.
  1. புவிநோக்கு செய்மதிகள்
  2. தொடர்பாடல் செய்மதிகள்.
  3. புவியியல் அமைவிடங்காட்டி செய்மதிகள் (ஜி.பி.எஸ்)

இவற்றில் புவிநோக்கு செய்மதிகளே புவிக்கு மிக அண்மையில் புவியைச் சுற்றி வருகின்றன. அண்ணளாவான 400 தொடக்கம் 900 கிலோமீற்றர் உயரத்தில் இவை புவியை வடக்கு தெற்கு திசையில் அமைந்துள்ள செய்மதி ஒழுக்கில் வலம் வருகின்றன. இதன் மூலம் இவை புவியின் மேற்பரப்பு முழுவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஏனெனில் இவை வடக்கு - தெற்காக சுற்றும் வேளையில் புவியானது கிழக்கு மேற்க்காக சுற்றுவதனால் இலகுவாக அமைகின்றது.

புவிநோக்கு செய்மதிகள் பல்வேறு தேவைகளுக்காகவும் விண்ணில் செலுத்தப்படலாம். உதாரணமாக
  1. வானிலை அவதானிப்பு (மொடிஸ் செய்மதி)
  2. தாவரவியல் ஆய்வு (லான்ட்சற் செய்மதிகள்)
  3. புவி மேற்பரப்பு வெப்பநிலை தொடர்பான ஆய்வுகளிற்கு (மொடிஸ்)
  4. இராணுவத் தேவைகளிற்கு  (மில்ஸ்ரார்)
என இதன் பயன்பாடுகள் தொடர்பான பட்டியல் அதிகரித்துக்கொண்டே செல்லும். இவையெல்லாம் எவ்வாறு சாத்தியப்படுகின்றன?
அனைத்தும் மின்காந்த அலைகளினாலே சாத்தியமாக்கப்படுகின்றன. இவை தொடர்பாக விளக்கமாக அடுத்த பதிவில் பார்ப்போம்.

புவி மேற்பரப்பைக் கண்காணிப்பது தொடர்பான பொதுவான படிமுறைகள்.

தொடுகையற்ற முறையில் புவி மேற்பரப்பைக் கண்காணிப்பதில் (Remote Sensing) மின்காந்த அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் சில பிரதான படிமுறைகள் எவ்வகையான செய்மதித் தொழில்நுட்பமாயினும் பொதுவாகக் காணப்படுகின்றன.
தொடுகையற்ற முறையில் புவி மேற்பரப்பைக் கண்காணிக்கும் படிமுறைகள் தொடர்பான வரிப்படம்

1.சக்தி முதல் (Energy Source) (A)
எமது புவி மேற்பரப்பைக் கண்காணிக்கும் தொழில்நுட்பமானது மின்காந்த அலைகளில் தங்கியிருப்பதால் மின்காந்த அலைகளை வெளியிடும் ஓர் சக்தி முதல் தேவைப்படுகின்றது. பொதுவாக சூரியனே இச் சக்திமுதலாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஏனெனில் சூரியனால் வெளியிடப்படும் மின்காந்த அதிர்வெண் வீச்சுக்கள் எமது கண்காணிப்பு தொழில்நுட்பத்திற்கு போதுமானதாக அமைகின்றது. எனினும் இராணுவ மற்றும் சில வானிலை தொடர்பான கண்காணிப்பிற்காக பயன்படுத்தும் செய்மதிகள் தங்களுக்கான சக்திமுதலைக் கொண்டிருக்கும் சந்தர்பங்களும் உண்டு.

2. சக்தி ஊடுகடத்தப்படல் (Energy Transmission) (B)
சக்தி முதலில் இருந்து வெளிப்படுத்தப்படும் மின்காந்த அலைகளானது புவிமேற்பரப்பை வந்தடைய வேண்டியுள்ளது. இது பின்னர் மீண்டும் தெறிப்படைந்து செய்மதிகளைச் சென்றடைய வேண்டியுள்ளது. இவ்வாறு மின்காந்த அலைகள் பயணம் செய்யும் பொழுது அது எமது வளிமண்டலத்தில் உள்ள வாயு முலக்கூறுகள் மற்றும் தூசுக்களால் அகத்துறிஞ்சப்படலாம் அல்லது அவற்றின் பிரயாணப்பாதைகளில் குழப்பம் ஏற்படுத்தப்படலாம். இது தொடர்பாக இன்னொரு பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

3. புவி மேற்பரப்புடனான மின்காந்த அலைகள் நடத்தைகள் (Interaction with Surface / Object) (C)

புவி மேற்பரப்பை வந்தடையும் மின்காந்த அலைகளானது மேற்பரப்பின் தன்மைக்கேற்றவாறும் மின்காந்த அலையின் இயல்புக்கு ஏற்றவாறும் தொடுகையுறும் மேற்பரப்பில் முற்றுமுழுதாக அல்லது பகுதியாக தெறிப்படையும்.

4. தெறிப்படைந்த அலைகளைப் பதிவு செய்தல் (Recording Reflected Energy) (D, E)
புவி மேற்பரப்பில் இருந்து தெறிப்படைந்து செல்லும் (சில சந்தர்பங்களில் புவி மேற்பரப்பில் இருந்து வெளிப்படும்) மின்காந்த அலைகள் செய்மதியில் அமைந்துள்ள உணரிகளினால் (Sensor) பதிவு செய்யப்பட்டு உடனடியாகவோ அல்லது திட்டமிடப்பட்ட நேர இடைவேளைகளிலோ கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படும்.

5.தரவுப்பகுப்பாய்வும், பிரயோகங்களும் (Analysis & Application) (F&G)
செய்மதிகளால் அனுப்பப்பட்ட தகவல்களானது அங்கு முதல் படிநிலை தரமுயர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டு (வானிலையினால் ஏற்படுத்தப்படும் இடையுறுகள் நிவர்த்தி செய்யப்பட்டு) அத் தகவல்களை பிரயோகப்படுத்தும் திணைக்களங்களிற்கு அல்லது நிறுவனங்களிற்கு அனுப்பப்படும். அங்கு அவை உரிய பகுப்பாய்வுகளிற்கு உட்படுத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப் பயன்படும்.

புவியியல் தகவல் முறைமை (GIS) -- ஓர் அறிமுகம்

புவியியல் தகவல் முறைமை (GIS) என்பது, தகவல்களையும், இடஞ்சார் முறையில் புவியுடன் தொடர்பு குறிக்கத்தக்க வேறு தொடர்பான விடயங்களையும் பெறுதல், சேமித்தல், பகுத்தாய்தல், மேலாண்மை செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு முறைமை என வரையறுக்கமுடியும்.  

மனிதனது அன்றாட வாழ்வில் புவியில்சார் இடங்குறிப்பு என்பது மிகவும் அவசியமாகின்றது. இதற்காக அவன் பல்வேறு தொழில்நுட்பங்களையும் வரைபடங்களையும் ஆதிகாலத்தில் இருந்தே பயன்படுத்தி வந்ததையும் நாம் அவதானிக்க முடியயும். எனினும் புவியியல் தகவல் முறைமையில் வரைபடங்கள் என்ற ஓர் எல்லையை விடுத்து அதற்கு மேற்பட்ட சில தொழில்நுட்பங்களும் உள்ளடக்கப்படுகின்றது.

 புவியியல் தகவல் தொழில்நுட்ப முறைமையில் முக்கியமாக 05 கூறுகளை உள்ளடக்கியது.
1. கணினி மற்றும் அதனுடன் இணைந்த இலத்திரனியல் வன்பொருட்கள் (Hardware)

2.கணினி மென்பொருட்கள் (Software)

3. தரவுகள் (Data)

4. அணுகுமுறைகள் (Approaches)

5. மனித வலு (People)

ஏனெனில் இன்றைய புவியியல் தகவல் முறைமையானது முற்றுமுழுதாக கணினியினைச் சார்ந்ததாக அமைந்துள்ளதனால் இவை அவசியமானதாகவும் முக்கியமானதாகவும் காணப்படுகின்றன. மேலும் மனிதவலு அல்லது பயனர் எனப்படும் பொழுது குறிப்பிடப்பட்ட நபர் உரிய தொழில்நுட்ப பகுப்பாய்வு அறிவுடையவராக இருத்தல் அவசியம். இல்லையெனில் அவரால் குறிப்பிட்ட முறைமையை பயன்படுத்த முடியாமல் போகலாம்.

மேலும் GIS ஆனது, பல வரைபட அடுக்குகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி பகுப்பாய்வுகளை மேற்கொள்ள சந்தர்பம் அளிக்கின்றமையினால் பல்வேறுபட்ட தேவைகளிலும் ஆய்வுகளிலும் இத்தொழில்நுட்பம் இன்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது.

 இப் புவியியல் தகவல் முறைமையின் முக்கிய பயன்பாட்டுப் பகுதிகளாக பின்வருவன அமைகின்றது.
1. புவியியல் ஆய்வுகளும் கற்கைகளும்
2. விமானப் பயணங்களும் அவற்றினை ஒழுங்குபடுத்தும் கட்டமைப்புக்களும்
3. நீர் வடிகாலமைப்பு மற்றும் முகாமைத்துவமும்
4. இராணுவ பாதுகாப்பு மற்றும் குற்றவியல் துறைகள்
5. விவசாய முகாமைத்துவம் மற்றும் ஆய்வுகள் மதிப்பீடுகள்
6. கட்டுமானப் பணிகள்
7. வியாபார முகாமைத்துவம் மதிப்பீடுகள் மற்றும் எதிர்கால முன்னுரைப்புக்கள்.
8. பொருள்கள் சேவைகள் வழங்கலும் களஞ்சியப்படுத்தலும்
9. இடர் அனர்த்த முகாமைத்துவம்
10. சுற்றுச்சூழல் முகாமைத்துவம் மற்றும் ஆய்வுகள்
11. தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் இணைந்த சேவைகள்
12. வானிலை காலநிலை ஆய்வுகள் கற்கைகள்
13. மருத்துவ கற்கைகள் ஆய்வுகள்.
14. மீட்பு ம்றறும் தேடல்கள்

செய்மதி அடிப்படையிலான வழிச்செலுத்தலும் நிலையம் குறித்தலும் - அறிமுகம்

செய்மதி அடிப்படையிலான வழிச்செலுத்தலும் நிலையம் குறித்தலும் (Satellite Based Navigation & Positioning) ஆனது புவியைச் சுற்றி செய்மதிகளை வட்ட செய்மதி ஒழுக்கில் சுற்றச் செய்து அவற்றில் இருந்து அறியப்பட வேண்டிய புவிமேற்பரப்பு புள்ளிக்கான தூரத்தை அளப்பதன் மூலம் அப்புள்ளியின்
நிலையத்தைக் குறிக்கும் பொறிமுறையாகும்.

இப்பொறிமுறையை நிறைவேற்ற அல்லது இவ்வாறான தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு நாடுகள் வேறுபட்ட தொகுதிகளை அபிவிருத்தி செய்துள்ளன.

1. GPS - ஐக்கிய அமெரிக்க நாடுகள்
2. GLONASS - ரஸ்ஸியா
3. Galileo Navigation System - ஐரோப்பிய ஒன்றியம்
4. COMPASS - சீனக் குடியரசு

தற்பொழுதைய நிலையில் GPS மற்றும் GLONASS ஆகியவை முற்றுமுழுதான தொழிற்பாட்டில் உள்ளன. மற்றயவை இன்னும் சிறிது காலத்தில்தொழிற்படக்கூடிய நிலையில் உள்ளன. 

இவ்வாறான நிலையில் பலரும் நினைப்பது GPS என்றால் செய்மதி அடிப்படையிலான வழிச்செலுத்தலும் நிலையம் குறித்தலும் என்று அது தவறாகும். GPS ஆனது அத் தேவையைப் பூர்த்தி செய்யஅமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட ஓர் தொகுதியாகும்.

எனினும்  GPS GLONSS உட்பட அனைத்தும் ஓர் பொதுவான தொழிற்பாட்டு முறையையே கொண்டுள்ளன. ஆனால் GPS இன் ஆவணத்தொகுப்பு அதிக எண்ணிக்கையான தொழிற்படு செய்மதிகள் GPS இன் பெயரை பிரபலப் படுத்தியதுடன் அமெரிக்காவின் GPS பாவனை மீதான கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டதும் மேலுமொரு காரணம் ஆகியது.

எனினும் இன்று சந்தைகளில் மற்றும் இணைத்து பாவிக்கக் கூடிய கருவிகள் கிடைப்பதானது செய்மதி அடிப்படையியிலான வழிச்செலுத்தல் மற்றும் நிலையப்படுத்தலை இலகுவாக்கியுள்ளது.


செய்மதி அடிப்படையிலான வழிச்செலுத்தலும் நிலையம் குறித்தலும் - அடிப்படை

 செய்மதி அடிப்படையிலான வழிச்செலுத்தலும் நிலையம் குறித்தலிலும் தொடர்பான அறிவியல் பின்னணியை கருத்தில் கொள்ளும் பொழுது நாம் GPS தொகுதியினை உதாரணமாக கொண்டு விளங்கிக்கொள்வது இலகுவானது ஏனெனில் நான் முன்னர் குறிப்பிட்டது போன்று அனைத்து தொகுதிகளினதும் அடிப்படை ஒன்றாகும்.

இத்தொகுதியினை நாம் முக்கியமாக மூன்று பகுதிகளாக வகுத்துக்கொள்ளலாம்:
1. விண்வெளிப்பகுதி - Space Segment
2. கட்டுப்பாட்டுப் பகுதி - Control Unit
3. பயனர் பகுதி - Users Segment

விண்வெளிப்பகுதி:


இப்பகுதியில் 06 வட்ட ஒழுக்குகளில் குறைந்தது 24 செய்மதிகள் இயங்க வேண்டும் என்பது அடிப்படைத் தேவையாகின்றது. GPS தொகுதியல் தற்சமயம் 30 செய்மதிகள் இயங்கிக் கொண்டுள்ளன. இச் செய்மதிகள் 20 000 கி.மீ ஆரையுடைய வட்ட 55 பாகை சரிவுக்கோணத்தில் உள்ள ஒழுக்குகள் ஆறில் ஒவ்வொன்றிலும் 04 செய்மதிகள் வீதம் செயற்படவே ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது எனினும் எதிர்பார்கப்பட்ட வாழ்வுக்காலத்தைவிட அதிக காலம் செய்மதிகள் இயங்கிக் கொண்டு இருப்பதால் சில மேலதிக ஒழுக்குகள் பின்னர் சேர்க்கப்பட்ட பொழுதும் அவற்றின் ஒழுக்குகளும் 20000 கி.மீ ஆரையுடைய வட்ட ஒழுக்குகளாகும்.

இங்கு இயங்கிக்கொண்டிருக்கும் செய்மதிகளில் அணுக்கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது ஏனெனில் இன் நிலையக் கணிப்பீட்டில் நேரக்கணிப்பு என்பது மிகவும் முக்கியமானது 01 நனோ செக்கன்(0.0000001 செக்கன்) கூட 300 மீற்றர் வழுவை ஏற்படுத்தக் கூடும் (இக்கணிப்புகளைப் பற்றி பின்னைய பதிவுகளில் விரிவாகபா பார்ப்போம்). இந்த அணுக் கடிகாரங்களின் வழுவானது 1 x 10 ^(-13) செக்கன் அளவினதாகும்.
இக்கடிகாரங்கள் நேர்த்தியான நேரஇடைவெளிகளில் மின்காந்த அதிர்வுகளை வெளியிடுவதற்கும் பயனர் கருவிகள் தூரங்களை அளந்துகொள்ள முதல் தங்கள் மின்காந்த அலைகளின் பயண நேரத்தைக் கணிப்பிடவும் பயன்படுகின்றன.

இச் செய்மதிகனானது இருவகை PRN (pseudorandom noise) Code களினை அனுப்புகின்றது. அவையாவன C/A (Coarse/Acquisition) Code , P (Precision) Code எனப்படும் இருவகை டிஜிற்றல்அதிர்வுகளை வெளியிடுகின்றது. C/A Code ஆனது பொதுமக்கள் தேவைக்காக இலவசமாக வழங்கப்படுகின்றதுடன்  P Code ஆனது அமெரிக்காவின் இராணுவத் தேவைகளிற்காக மட்டும் பயன்படுத்தப்படுவதற்கானது. 

இவ் டிஜிற்றல் சமிக்ஞைகளின் அதிர்வெண் குறைவானதால் இவற்றை செய்மதிகளில் இருந்து நேரடியாக புவிக்கு அனுப்ப முடியாது எனவே இவை அதிர்வெண் கூடிய அனலொக் சமிக்ஞைகளுடன் கலக்கப்பட்டு புவிக்கு அனுப்பப்படுகின்றன. எமது FM ரேடியோக்களில் எவ்வாறு ஒலி அலைகள் மின்காந்த அலைகளினுடன் கலந்து அனுப்பப்படுகின்றனவோ அதைப்போல எனக் கருதலாம் எனினும் சிறிது வேறுபாடுகள் உண்டு.

கலந்து அனுப்பப்படும் பொழுது இவை இருவகை அதிர்வெண் கொண்ட அலைவீச்சுகளில் அனுப்பப்படுகின்றன. அவையாவன 1227.6 Hz மற்றும் 1575.42 Hz இவை முறையே L1 மற்றும்  L2 என அழைக்கப்படும்.

 L1 அலைகளில் CA Code மற்றும் P Code ஆகிய இருவகை டிஜிற்றல்அலைகளும் L2 அலைகளில் P Code மட்டும் கலந்துஅனுப்பப்படுகின்றன. இவ் டிஜிற்றல் அலைகளே பயனர் கருவிகளினால் செய்மதிக்கும் தமக்கும் இடையேயான தூரத்தைக் கணிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. (இவை பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம்)

இவ் டிஜிற்றல் அலைகள் மட்டுமல்லாது செய்மதிகள் பயனர் கருவிக்கு மேலும் சில தகவல்களையும் அனுப்புகின்றன. அதவாது செய்மதியின் நேரம் மற்றும் திகதி, செய்மதியினுடைய அந்தக்கணத்திலான அமைவிடம், செய்மதியினுடைய செயற்படும் தன்மை ஆகியவையாகும். இவை வழிச்செலுத்தல் தகவல்கள் (Navigation Message) என்று  அழைக்கப்படும். 

கட்டுப்பாட்டுப் பகுதி:


இப்பகுதியினுள் செய்மதிகளின் செயற்பாடுகள் தொடர்பான கண்காணிப்பு மையங்கள் அடங்கும். இவை செய்மதிகளின் ஒழுக்குகளில் ஏற்படும் மாற்றங்கள் அவற்றின் கடகாரங்களில் ஏற்படும் வழுக்கள் தொடர்பான கண்காணிப்புக்களை மேற்கொண்டு தலமைக் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும் அங்கிருந்து அவை செய்மதி தலைமை கட்டுப்பாட்டு மையத்தினை கடக்கும் பொழுது அவற்றிற்கு தரவேற்றம் செய்யப்படும்.


பயனர் பகுதி:

இப்பகுதியினுள் GPS இன் பயனாளர்கள் உள்ளடங்குவார்கள். அத்துடன் இங்கு முக்கியமான கருவியாக GPS Receiver (ரிசீவர் அல்லது பெறுநர்) கருவி அமைகின்றது. இக்கருவி தொடர்பாகவும் இதன் வகைகள் தொடர்பாகவும் இறுதிப்பகுதியில் கவனிப்போம்.

பென்ற்றிலி மென்பொருள்கள் - பொறியியல் வரைவு மற்றும் வடிவமைப்புக்கானது (Bentley Systems Inc - Software Collection for Engineering )

நாம் எல்லோரும் கணணி உதவியிலான வரைதலுகு(CAD) Auto CAD மென்பொருளினேயே பயன்படுத்துவதுடன் அது மட்டுமே இலகுவானது என்று நம்பிக்கொண்டும் இருக்கின்றோம். ஏனெனில் நாம் அது சம்பந்தமான புதிய மென்பொருட்களினைத்  தேடிக்கற்பதில் நாட்டமின்றியிருக்கின்றோம். 

ஆனால் இம் மென்பொருளைத் தவிர வேறு பல இவ்வகையான கணணி உதவியிலான  குறிப்பிட்ட சில வைகயான வரைதலிற்கு மிகச்  சிறந்தவையாக இருக்கின்றன. ஆயினும் அவற்றினை நாம் எமது சுயமுயற்சியில் இணையத்தள வீடியோக்களின் ஆதரவுடனேயே கற்க வேண்டியுள்ளது. ஏனெனில் அவற்றினைக் கற்பிக்கும் கல்வி நிலையங்கள் பெரும்பாலும் நமது நாட்டில் இல்லை என்பதாலாகும்.

ஆனால் நீங்கள் மேற்க்கத்தைய நாடுகளிலோஅல்லது மத்தியகிழக்கு நாடுகளிலேயோ வேலைக்குச் செல்வது என்று தீர்மானித்திருந்தால் மிக முக்கியமானதாகும்

அவ்வகையான மென்பொருள்தொகுதியில் Bentley Systems Inc இனால் வெளியிடப்படும்

  • மைக்ரோ ஸ்டேசன் (Micro Station)
  • பவர் சிவில் (Power Civil)
  • பென்ரிலி மப் (Bentley Map)
  • வாட்டர் ஜெம்ஸ் (Water GEMS)
  • சுவர் ஜெம்ஸ் (Sewer GEMS)

என்பன மிக முக்கியமானவை.


மைக்ரோ ஸ்டேசன் (Micro Station)

இது இருபரிமான முப்பரிமான கணனி உதவியிலான வரைதலுக்கு பெரும் உதவியளிப்பதுடன் இதன் இலகுவான பணனர் இடைமுகம், பல்வேறு வகையான கோப்புக்களினையும் பயன்படுத்தக் கூடிய தன்மை என்பவற்றுடன் மேலதிக பொறியியல் வடிவமைப்புக்களிற்காக வடிவமைப்பு மென்பொருள் தொகுதிகளில் பணன்படுத்தும் பொழுது எந்த வித மாற்றங்களினையும் மேற்கொள்ளாது தரவுக் கோப்புக்களினை பயன்படுத்தக் கூடிய தன்மையும் முக்கியமானதாகும்

பவர் சிவில் (Power Civil)

வீதி வடிமைப்பு மற்றும் தரைத்தோற்ற வடிவமைப்பு என்பவற்றிற்கு ஓர் மிகச் சிறந்த மென்பொருளாகும். ஏனெனில் பெரும்பாலான பொறியியல் பகுப்பாய்வுகளினை இதன் மூலம் நாம் மிக இலகுவாக செய்து கொள்ள முடிவதுடன் பல்வேறு பொறியியல் கணிப்புக்களினையும் இப்படியிருந்தால் எப்படியிருக்கும் என்பது போன்ற நிலைமைகளினைச் சோதித்துப்பார்க்கும் வகையிலான பகுப்பாய்வுகளினையும் செய்து கொள்ள முடிவது சிறப்பம்சமாகும்.
மேலும்  தரைத்தோற்ற அமைப்புக்களினை கணணியில் மாதிரியிடல் குறுக்கு வெட்டு மற்றும் நீள்வெட்டு வரைபுகளினை வரைதல், வெட்டியெடுக்கப்படும் மற்றும் நிரவும் அளவீடுகளினைகணிப்பிடுதல், சமவுயரக் கோடுகளினை வரைதல் போன்றன மற்றைய மென்பொருள்களில் கிடைக்காத சிறப்பம்சம் என்பதுடன் இது பல்வேறு வகையான தரவுத்தளங்களுடன் இணைப்பை மேற்கொள்ளும் வசதியுடனும் உள்ளதால் தரவுச் சேமிப்பும் இலகுவானதாகும்.

பென்ரிலி மப் (Bentley Map)

இது புவியியல் தகவல் தொகுதிக்கு முற்றுமுழுதான பயன்பாட்டினை வழங்குவதுடன் அது சம்பந்தமான பல்வேறு பகுப்பாய்வுகளினையும் செய்து கொள்ள முடிவதுடன் செய்மதிப் படங்களின் பகுப்பாய்வுகள் வரைபடம் தயாரித்தல் போன்றவற்றினையும் இலகுவாக மேற்கொள்ள வழியமைக்கின்றது.

வாட்டர் ஜெம்ஸ் (Water GEMS) / சுவர் ஜெம்ஸ் (Sewer GEMS)

வாட்டர் ஜெம்ஸ் மற்றும் சுவர்ஜெம்ஸ் என்பன முறையே குடிநீர் வடிகாலமைப்பு மற்றும் கழிவு நீர் வடிகாலமைப்புத் தொடர்பான வரைபுகளிற்கு மற்றும் திட்டமிடலுக்கு மிகவும் பயனுள்ளது. ஏனெனில் இவற்றினைக் கொண்டு நாம் திட்டமிடும் பொழுது அல்லது வடிவமைக்கும் பொழுது நாம் எந்தவிதக் கணிப்பீடுகளினையும் செய்யத் தேவையில்லாமல் இருக்கின்றது. தேவைப்படும் தரவுகளினை நாம் உள்ளீடு செய்யின் மென்பொருளானது எமக்கு அக்குழாய்களில் ஏற்படுத்தப்படும் அழுத்தம் வேகம் மற்றும் இதர பொறியியல் விபரங்களினைக் கணித்து எமக்கு வடிமைப்பில் தவறுகள் ஏற்படாதவாறும் வேகமாக வடிவமைப்பினை மேற்கொள்ளக் கூடிய வகையிலும் உதவுகின்றது