Tuesday, January 5, 2016

யாழ்ப்பாண கடல் நீரேரித் திட்டம்

யாழ்ப்பாணமானது எந்தவித மேற்பரப்பு நன்னீர் ஆதாரங்களையும் கொண்டிராத ஓர்பகுதியியாகும். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மழைநீர் தேங்கி நிற்கும் குட்டைகள் உள்ள போதும் இவை பெரியளவிலான மக்கள் தேவைகளினைப் பூர்த்தி செய்யத் தேவையான வழங்கலை தர முடியாதவை மட்டுமல்ல வரட்சிக்காலத்தில் வற்றிப் போய்விடுவனவும் கூட.

ஆனால் யாழ்ப்பாணமானது தேவைக்கதிகமாக உள்நாட்டு கடல்நீரேரிகளைக் கொண்டுள்ளது. ஆனால் அவை உவர்நீர்ப் பிரதேசங்களாக உள்ளமையே சிக்கலானது. ஆகவே இவற்றின் உவர்நீர்த் தன்மையை மாற்றி நன்னீர் கடல்நீரேரிகளாக மாற்றியமைப்பின் யாழ்குடாநாட்டின் நீர்த்தேவை தொடர்பான பிரச்சனைகள் தீர்வடைந்துவிடும்.

இதற்கான திட்டமே யாழ்பாண கடல்நீரேரித் திட்டம் ஆகும். இது ஓர் அண்மைக்காலத் திட்டமல்ல. 1879களில் அப்போதைய ஆளுநரால் முன்மொழியப்பட்டு பரீட்சிக்கப்பட்டு பின்னர் பல்வேறு மேம்படுத்தல்களிற்கு உள்ளாக்கப்பட்ட திட்டமொன்றாகும்.

யாழ் கடநீரேரித் திட்டம்


யாழ்ப்பாணமானது பிரதானமாக 03 கடல்நீரேரிகளினைக் கொண்டது. அவையாவன 
1. வடமராட்சி கடல்நீரேரி
2. உப்பாறு
3. ஆனையிறவுக் கடல்நீரேரி.

1879களில்முன்மொழியப்பட்டதிட்டமானது வடமராட்சிக் கடல்நீரேரியினை தொண்டமனாறு பகுதியில் மறித்து ஓர் அணையைக் கட்டுவதன் மூலம் அப்பகுதியில் கிடைக்கும் மழைநீர் முழுவதும் கடலினுள் செல்வதைத் தடுத்துபெருமளவினை அப்பகுதியில் சேர்த்துவைப்பதன் மூலம் அப்பிரதேசத்தின் உப்புச் செறிவினை படிப்படியாக குறைத்தலாகும். இதே போன்று உப்பாறினையும் நாவற்குழிப் பகுதியில் மறித்து அணை ஒன்றைக் கட்டுவதன் மூலம் அப்பகுதியினையும் நன்னீர்த் தேக்கமாக மாற்றியமைத்தலாகும். 
 1879களில் வடக்குமாகண பகுதிக்கு பொறுப்பாகவிருந்த ஆங்கிலேய ஆளுநரான Twyneham என்பவர் ஆரம்ப சாதகநிலைமைகள் தொடர்பான கற்கைகளினை மேற்கொண்டு அறிக்கையிட்டிருந்தார். பின்னர் 1916களில் அப்போதைய ஆளுநராக கடமையாற்றிய Horseburge என்பவர் இதற்கான செயற்றிட்டத்தினை முன்னெடுத்திருந்தார். எனினும் அன்று அவரது காலம் பிரிட்டிஷ ஆட்சியின் இறுதிக் காலமாக அமைந்த காரணத்தினால் நிதி ஒதுக்கீடுகளில் சிக்கல்கள் காணப்பட்டதன் காரணமாக தற்காலிக செயற்றிட்டமாகவே இதனை பலகைகள் கொண்டுவடிவமைத்திருந்தார்.

இத்திட்டத்தின் குறைபாடுகள்:

இயற்கையான நீரோடத்தினைக் கட்டுப்படுத்தி நீரினைச் சேகரிக்கும் முயற்சியாகையால் பல விவசாய நிலங்கள் பயன்படுத்த முடியாத நிலமைக்கு உள்ளானமை.

நீரோட்டம் இல்லாத காரணத்தினால் உவர்த்தன்மை கழுவியகற்றல் தொழிற்பாடு இல்லாது போனமை. அதன்காரணமாக உப்புத் தன்மை பூரணமாக இல்லாது போக நீண்டகாலம் செல்லும் நிலையேற்பட்டமை.

Webb மேம்படுத்தல்
பின்னர் 1942 களில் பிராந்திய நீர்பாசன பொறியியலாளராக இருந்த என்பவர் இது தொடர்பாக விரிவான ஆய்வுகளினை மேற்கொண்டு தனது முன்மொழிவுகளினை 1945 களில் வெளியிட்டார். அவரின் முன்மொழிவுகளின் அடிப்டையில் அரியாலை மற்றும் தொண்டமனாறு சுழல்கதவுகளுடன் கூடிய அணைகள் அல்லது தடுப்புக்கள் அமைக்கப்பட்டன. இவ் வேலைத் திட்டங்கள் 1955 களில் பூரணமாகின. 

யாழ்பாணத்திற்கான ஆறு

பின்னர் பிராந்திய நீர்ப்பாச பொறியிலாளராகவும், தேசிய நீர்பாச பொறியிலாளராகவும் கடைமையாற்றிய ஆறுமுகம் அவர்களினால் யாழ்பாணத்திற்கான ஆறு எனும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவும் யாழ்கடனீரேரித் திட்டத்தின் ஓர் மேம்படுத்தல் ஆகும். 
இத் திட்டமானது வட மாகாணம்முழுவதும் ஓர் நீரோட்டத்தினை ஏற்படுத்துவதன் மூலம் உக்புச் செறிவினை விரைவாக அகற்றல், நன்னீர் மேற்பரப்புக்களை அதிகரித்தல் என்பதன் மூலம் சுற்றுச் சூழலைத் தரமுயர்த்தும் நடவடிக்கையாகும்.

வன்னிப் பகுதியில் பொழியும் மழையின் வெள்ளமானது இரணைமடு குளத்தினை சென்றடைகின்றது. இதன் அதிகப்படியான நீரானது உரியன் பகுதியினூடக வழிந்து சென்று ஆனையிறவுக் கடல்நீரேரிப் பகுதியில் வீழ்கின்றது. 
ஆனையிறவுக் கடல்நீரேரியானது கண்டி வீதி மற்றும் சுண்டிக்குளம் வீதி ஆகியவற்றினால் கடலில் இருந்து வேறுபடுத்தப்படுகின்றது. இப்பகுதிகளில் முறையான சுழல்கதவுகளினை அமைப்பதன் மூலமும் இரணைமடு பிரதேசத்தில் இருந்து கனகராயன் ஆற்றினால் கொண்டுவரப்படும் மழைநீரினைப் பயன்படுத்தியும் இவ் ஆனையிறவுக் கடல்நீரேரியினை நன்னீராக்குவது இத்திட்டத்தின் முதல் படி.

பின்னர் ஆனையிறவு கடல்நீரேரி மற்றும் உப்பாறு என்பவற்றைத் தொடுப்பதன் மூலம் ஓரு நீரோட்டத்தினை ஏற்படுத்தி யாழ்பாணத்திற்கான ஓர் ஆற்றினை உருவாக்குவதே இத்திட்டத்தின் இறுதியாகும்.

இத்திட்டத்தின் அடிப்படையில் ஆனையிறவு கடனீரேரி அபிவிருத்திகள் 1962 களில் ஆரம்பிக்கப்பட்டதுடன் 2.5 கி.மி நீளமான ஆனையிறவு வடமராட்சி கடனீரேரிகளின் தொடுப்பு கால்வாய் அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டன. 

எனினும் பின்னர் நிதி ஒதுக்கீடுகளில் ஏற்பட்ட சிக்கல்களும் நாட்டின் போர்ககால சிக்கல்களும் அபிவிருத்திப்பணிகளினை இடையு}று செய்து மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளையும் அழித்து இன்று யாழ்குடாநாடு நீரி பிரச்சனைக்கு முகம் கொடுக்க தூண்டிவிட்டது.

0 comments:

Post a Comment