Tuesday, January 5, 2016

யாழ்ப்பாணமும் குடிநீரும்

யாழ்ப்பாணமானது முற்று முழுதாகநிலத்தடி நீரினை நம்பியுள்ள ஓர் பிரதேசமாகும். அதனால் அதன் இருப்பை உறுதி செய்வதே யாழ்ப்பாணத்தின் குடிப்பரம்பலைத் தக்க வைக்கும் ஓரே மார்க்கமாகும்

யாழ்குடாநாட்டின் பல பிரதேசங்களின் நிலத்தடி நீரினில் மசகெண்ணை கலந்துள்ளமையினால் அந்நீர் பாவனைக்குதவாது மாறும் சிக்கல் நிலமை உருவாகியுள்ள நிலையில், அப்பிரதேச மக்களுக்கு நீர் வழங்குவதற்காக மற்றைய பிரதேசங்களில் இருந்து நிலத்தடி நீரானது அதிகமாக உறிஞ்சப் படுவதால் அப்பிரதேசங்களும் கடும் பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும். உதாரணமாக நிலத்தடி நீர் வெளியேற்றப்படுவதனால் ஏற்படும் இடங்களிற்கு கடல் நீர் உட்புகும் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது ஓர் பாரிய சவாலாகும்.
இவ்வாறான நிலமையில் நிலத்தடி நீரின் மட்டத்தினை உயர்த்துவதற்கும் நிலையாகப் பரமரிப்பதற்கும் யாழ்ப்பாண குடிநீரேரித் திட்டம் என்ற நீண்டகால சுற்றாடல் நட்பான திட்டம் ஒன்று 1879 களில் அன்றைய வடக்குமாகாண ஆளுநர் Twyneham அவர்களால் பரீட்சார்த்த முறையில் ஆரம்பிக்கப்பட்டது.

பின்னர் 1916களில் இத்திட்டமானது முழுமையாக Horseburge எனும் ஆளுநரால் அமுல்படுத்தப்பட்டது.1920 தொடக்கம் 1923 காலப்பகுதியில் இவ்வேலத்திட்டங்கள் முழுமையாக பூர்த்தியடைந்தன. (இத்திட்டம் தொடர்பான முழுமையான விபரங்களிற்கு)

எனினும் இத்திட்டத்தினை முழுமையாக அமல்படுத்தி பராமரிக்க பின்னர் வந்த அரசுகளும் போர்க்கால சூழலும் பெரிதும் இடங்கொடாமையால் இத்திட்டம் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியினைத் தர தவறியமையே இன்று வடமராட்சியின் பல பகுதிகளும் தட்டுவன்கொட்டி உட்பட ஆனையிறவின் பல பகுதிகளும் குடிநீர் பிரச்சனையை எதிர்கொள்வதற்கான காரணமாகும்.

எனவே எண்ணைக் கலப்பு என்ற ஓர் காரணத்தினை மட்டும் மின்னுற்பத்தி நிறுவனத்திற்கு எதிரான பிரச்சாரங்களை மட்டும் கொண்ட போராட்டங்களை செய்து கொண்டிருக்காது நீண்டகால நிலையான அபிவிருத்திக்கான திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய தருணம் இது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இரணைமடு குளத்து நீரினை யாழ் கொண்டு செல்கின்றோம் மகாவலி நீரினை வன்னி கொண்டு வருகின்றோம் என்ற திட்டங்கள் இயற்கைச் சூழலில் பாரிய மாற்றங்களினை ஏற்படுத்துவனவும் சமூக கட்டமைப்புக்களில் குழப்பங்களினை ஏற்படுத்த வல்லவனாகவும் அமைவது மட்டுமன்றி பொருளாதார ரீதியில் பாரிய சுமையினை ஏற்படுத்துவதுடன் இது ஓர் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியாகவும் இருக்காது.

சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் ஓர் மாற்றத்தினை ஏற்படுத்தக் கூடியதாகஅமையினும் இம் மாற்றம் அரசியல் தலமைகளிற்கு அழுத்தம் கொடுக்காதவிடத்து இதனால் பயன் இல்லை. ஏனெனில் திட்டங்கள் தொடர்பான முடிவுகள் அரசியல் தலைமைகளால் மட்டுமே எடுக்கப்படுகின்றன. ஆனால் எம் யாழில் அரசியல் தலைமைகள் இனவாத அடிப்படையில் சகலதையும் மக்களைப் பார்க்கும் விதத்தில் மாற்றியமைத்து தங்களது அரசியல் இருப்பை தக்கவைக்கும் முயற்சியில் உள்ளமையினால் இவ்வாறான தூரநோக்கு திட்டங்கள் அமல்படுத்துவது சாத்தியமில்லை என்பது மட்டும் தெளிவு.

எனவே இன்றைய நிலையில் எமது அரசியல் தலைமைகள் மற்றும் சூழலியலாளர்கள் விட்ட தவறுகளே இன்று நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளே தவிர சுன்னாகம் மின்னுற்பத்தி நிறுவனம் மட்டுமல்ல. ஆனால் இந்த ஓர் எச்சரிக்கை நிலைமை ஏற்பட்டிருக்காது விடின் யாழ்ப்பாணம் குடிநீர்இன்றி 20 ஆண்டுகளில் தவிக்கும் நிலையை சற்று தளர்தியிருக்கின்றது. ஏனெனில் இன்றைய விழிப்புணர்வு சிறிதேனும் மாற்றத்தினை அரசியல் தலைமைகளிடம் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை.

0 comments:

Post a Comment