தொடுகையற்ற முறையில் புவி மேற்பரப்பைக் கண்காணிப்பதில் (Remote Sensing) மின்காந்த அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் சில பிரதான படிமுறைகள் எவ்வகையான செய்மதித் தொழில்நுட்பமாயினும் பொதுவாகக் காணப்படுகின்றன.
தொடுகையற்ற முறையில் புவி மேற்பரப்பைக் கண்காணிக்கும் படிமுறைகள் தொடர்பான வரிப்படம் |
1.சக்தி முதல் (Energy Source) (A)
எமது புவி மேற்பரப்பைக் கண்காணிக்கும் தொழில்நுட்பமானது மின்காந்த அலைகளில் தங்கியிருப்பதால் மின்காந்த அலைகளை வெளியிடும் ஓர் சக்தி முதல் தேவைப்படுகின்றது. பொதுவாக சூரியனே இச் சக்திமுதலாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஏனெனில் சூரியனால் வெளியிடப்படும் மின்காந்த அதிர்வெண் வீச்சுக்கள் எமது கண்காணிப்பு தொழில்நுட்பத்திற்கு போதுமானதாக அமைகின்றது. எனினும் இராணுவ மற்றும் சில வானிலை தொடர்பான கண்காணிப்பிற்காக பயன்படுத்தும் செய்மதிகள் தங்களுக்கான சக்திமுதலைக் கொண்டிருக்கும் சந்தர்பங்களும் உண்டு.
2. சக்தி ஊடுகடத்தப்படல் (Energy Transmission) (B)
சக்தி முதலில் இருந்து வெளிப்படுத்தப்படும் மின்காந்த அலைகளானது புவிமேற்பரப்பை வந்தடைய வேண்டியுள்ளது. இது பின்னர் மீண்டும் தெறிப்படைந்து செய்மதிகளைச் சென்றடைய வேண்டியுள்ளது. இவ்வாறு மின்காந்த அலைகள் பயணம் செய்யும் பொழுது அது எமது வளிமண்டலத்தில் உள்ள வாயு முலக்கூறுகள் மற்றும் தூசுக்களால் அகத்துறிஞ்சப்படலாம் அல்லது அவற்றின் பிரயாணப்பாதைகளில் குழப்பம் ஏற்படுத்தப்படலாம். இது தொடர்பாக இன்னொரு பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
3. புவி மேற்பரப்புடனான மின்காந்த அலைகள் நடத்தைகள் (Interaction with Surface / Object) (C)
புவி மேற்பரப்பை வந்தடையும் மின்காந்த அலைகளானது மேற்பரப்பின் தன்மைக்கேற்றவாறும் மின்காந்த அலையின் இயல்புக்கு ஏற்றவாறும் தொடுகையுறும் மேற்பரப்பில் முற்றுமுழுதாக அல்லது பகுதியாக தெறிப்படையும்.
4. தெறிப்படைந்த அலைகளைப் பதிவு செய்தல் (Recording Reflected Energy) (D, E)
புவி மேற்பரப்பில் இருந்து தெறிப்படைந்து செல்லும் (சில சந்தர்பங்களில் புவி மேற்பரப்பில் இருந்து வெளிப்படும்) மின்காந்த அலைகள் செய்மதியில் அமைந்துள்ள உணரிகளினால் (Sensor) பதிவு செய்யப்பட்டு உடனடியாகவோ அல்லது திட்டமிடப்பட்ட நேர இடைவேளைகளிலோ கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படும்.
5.தரவுப்பகுப்பாய்வும், பிரயோகங்களும் (Analysis & Application) (F&G)
செய்மதிகளால் அனுப்பப்பட்ட தகவல்களானது அங்கு முதல் படிநிலை தரமுயர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டு (வானிலையினால் ஏற்படுத்தப்படும் இடையுறுகள் நிவர்த்தி செய்யப்பட்டு) அத் தகவல்களை பிரயோகப்படுத்தும் திணைக்களங்களிற்கு அல்லது நிறுவனங்களிற்கு அனுப்பப்படும். அங்கு அவை உரிய பகுப்பாய்வுகளிற்கு உட்படுத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப் பயன்படும்.
0 comments:
Post a Comment