Tuesday, January 5, 2016

GPS தொழில் நுட்பம் உலக நாடுகளின் மேல் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை அதிகரிக்குமா??


ஜி பி எஸ் தொழில் நுட்பமானது தற்போது பலவகைத் தேவைகளிற்கும் பயன்படுத்தப்படும் ஒன்றாகும்கடலில் செல்லும் கப்பல்கள் தொடக்கம் வீதியில்  செல்லும் வாகனங்கள் வரை தங்களது பாதையை அடையாளங்கண்டு கொள்வதற்காக இதனைப் பயன்படுத்திக் கொள்கின்றனசிறப்பான செயற்பாடுஇலவச சேவைமற்றும் இலகுவான பயன்பாட்டுக்குரிய பயனர் இடைமுகம் என்பன இதன் பாவனையை சாதாரண மக்கள் மத்தியிலும் அதிகரித்துள்ளது.
GPS இன் பாவனையானது வீதி நகர்வுகள் மட்டுமல்ல இராணுவ, புலனாய்வுத்துளை மற்றும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களிற்கு முதுகெலும்பாய் அமைகின்றது.
இவையெல்லாம் நன்றாகத் தான் இருக்கின்றன. தற்பொழுது எழுந்துள்ள சிக்கல் என்னவென்றால் 3ம் தலைமுறை  ஜி பி எஸ்  (GPS) தொழில்நுட்பத்தில் அமெரிக்கா தன் மேலாதிக்கத் தன்மையை அதிகரிப்பது தான் தற்பொழுது எழுந்துள்ள சிக்கல். அதாவது இரண்டாம் தலைமுறை ஜி பி எஸ் தொழில்நுட்பத்தில் பாவனையாளரைக் கட்டுப்படுத்தும் வசதி இல்லை. இதன் காரணமாக அமெரிக்காவினால் எதனையும் கட்டுப்படுத்த முடியாத ம சூழ்நிலை காணப்படுகின்றது. மேலும் அமெரிக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே அமெரிக்கா விற் கெதிராக பல்வேறு தாக்குதல்களைத் திட்டமிட பலருக்கும் உதவியது வ்  ஜி பி எஸ் தொழில்நுட்பம்.
இதன்காரணமாக பல்வேறு பாவனையைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்களுடன் தயாராகின்றது ஜி பி எஸ் 3. இதன் காரணமாக அமெரிக்கா பல நிபந்தனைகளை அதன் பாவனை நாடுகளிடம் நிர்பந்திக்க முடியும்.
எனினும் இவ்வாறான நிலமை ஏற்படும் என்பதனை ஆரம்பத்திலே அறிந்து கொண்ட சில விண்வெளி வலுக்கொண்ட நாடுகள் தங்களுக்கு உரித்தான பிராந்திய அமைவிட வழிகாட்டிப் பொறிமுறைகளை ஏற்படுத்துவதற்கான நடைமுறைகளைத் தொடங்கி விட்டன அவையாவன:

GNOLSS : ரஸ்சியா
Galileo: ஐரோப்பிய ஒன்றியம்
Beidou & COMPASS: சீனா
IRNSS: இந்தியா
QZSS: ஜப்பான்

எனினும் விண்வெளி வலு இல்லாத இலங்கை போன்ற நாடுகளின் நிலை? அமெரிக்காவிடமோ இல்லை இந்த பிராந்திய விண்வெளி வலுமிக்க நாடுகளிடமோ சரணாகதியடைவதைத் தவிர வேறுவழியில்லை.

எவ்வாறு புவியைக் கண்காணிக்கின்றன?

செய்மதிகளில் பல வகையான செய்மதிகள் உள்ளன. பொதுவாக அவை பின்வருமாறு வகைப்படுத்த முடியும்.
  1. புவிநோக்கு செய்மதிகள்
  2. தொடர்பாடல் செய்மதிகள்.
  3. புவியியல் அமைவிடங்காட்டி செய்மதிகள் (ஜி.பி.எஸ்)

இவற்றில் புவிநோக்கு செய்மதிகளே புவிக்கு மிக அண்மையில் புவியைச் சுற்றி வருகின்றன. அண்ணளாவான 400 தொடக்கம் 900 கிலோமீற்றர் உயரத்தில் இவை புவியை வடக்கு தெற்கு திசையில் அமைந்துள்ள செய்மதி ஒழுக்கில் வலம் வருகின்றன. இதன் மூலம் இவை புவியின் மேற்பரப்பு முழுவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஏனெனில் இவை வடக்கு - தெற்காக சுற்றும் வேளையில் புவியானது கிழக்கு மேற்க்காக சுற்றுவதனால் இலகுவாக அமைகின்றது.

புவிநோக்கு செய்மதிகள் பல்வேறு தேவைகளுக்காகவும் விண்ணில் செலுத்தப்படலாம். உதாரணமாக
  1. வானிலை அவதானிப்பு (மொடிஸ் செய்மதி)
  2. தாவரவியல் ஆய்வு (லான்ட்சற் செய்மதிகள்)
  3. புவி மேற்பரப்பு வெப்பநிலை தொடர்பான ஆய்வுகளிற்கு (மொடிஸ்)
  4. இராணுவத் தேவைகளிற்கு  (மில்ஸ்ரார்)
என இதன் பயன்பாடுகள் தொடர்பான பட்டியல் அதிகரித்துக்கொண்டே செல்லும். இவையெல்லாம் எவ்வாறு சாத்தியப்படுகின்றன?
அனைத்தும் மின்காந்த அலைகளினாலே சாத்தியமாக்கப்படுகின்றன. இவை தொடர்பாக விளக்கமாக அடுத்த பதிவில் பார்ப்போம்.

புவி மேற்பரப்பைக் கண்காணிப்பது தொடர்பான பொதுவான படிமுறைகள்.

தொடுகையற்ற முறையில் புவி மேற்பரப்பைக் கண்காணிப்பதில் (Remote Sensing) மின்காந்த அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் சில பிரதான படிமுறைகள் எவ்வகையான செய்மதித் தொழில்நுட்பமாயினும் பொதுவாகக் காணப்படுகின்றன.
தொடுகையற்ற முறையில் புவி மேற்பரப்பைக் கண்காணிக்கும் படிமுறைகள் தொடர்பான வரிப்படம்

1.சக்தி முதல் (Energy Source) (A)
எமது புவி மேற்பரப்பைக் கண்காணிக்கும் தொழில்நுட்பமானது மின்காந்த அலைகளில் தங்கியிருப்பதால் மின்காந்த அலைகளை வெளியிடும் ஓர் சக்தி முதல் தேவைப்படுகின்றது. பொதுவாக சூரியனே இச் சக்திமுதலாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஏனெனில் சூரியனால் வெளியிடப்படும் மின்காந்த அதிர்வெண் வீச்சுக்கள் எமது கண்காணிப்பு தொழில்நுட்பத்திற்கு போதுமானதாக அமைகின்றது. எனினும் இராணுவ மற்றும் சில வானிலை தொடர்பான கண்காணிப்பிற்காக பயன்படுத்தும் செய்மதிகள் தங்களுக்கான சக்திமுதலைக் கொண்டிருக்கும் சந்தர்பங்களும் உண்டு.

2. சக்தி ஊடுகடத்தப்படல் (Energy Transmission) (B)
சக்தி முதலில் இருந்து வெளிப்படுத்தப்படும் மின்காந்த அலைகளானது புவிமேற்பரப்பை வந்தடைய வேண்டியுள்ளது. இது பின்னர் மீண்டும் தெறிப்படைந்து செய்மதிகளைச் சென்றடைய வேண்டியுள்ளது. இவ்வாறு மின்காந்த அலைகள் பயணம் செய்யும் பொழுது அது எமது வளிமண்டலத்தில் உள்ள வாயு முலக்கூறுகள் மற்றும் தூசுக்களால் அகத்துறிஞ்சப்படலாம் அல்லது அவற்றின் பிரயாணப்பாதைகளில் குழப்பம் ஏற்படுத்தப்படலாம். இது தொடர்பாக இன்னொரு பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

3. புவி மேற்பரப்புடனான மின்காந்த அலைகள் நடத்தைகள் (Interaction with Surface / Object) (C)

புவி மேற்பரப்பை வந்தடையும் மின்காந்த அலைகளானது மேற்பரப்பின் தன்மைக்கேற்றவாறும் மின்காந்த அலையின் இயல்புக்கு ஏற்றவாறும் தொடுகையுறும் மேற்பரப்பில் முற்றுமுழுதாக அல்லது பகுதியாக தெறிப்படையும்.

4. தெறிப்படைந்த அலைகளைப் பதிவு செய்தல் (Recording Reflected Energy) (D, E)
புவி மேற்பரப்பில் இருந்து தெறிப்படைந்து செல்லும் (சில சந்தர்பங்களில் புவி மேற்பரப்பில் இருந்து வெளிப்படும்) மின்காந்த அலைகள் செய்மதியில் அமைந்துள்ள உணரிகளினால் (Sensor) பதிவு செய்யப்பட்டு உடனடியாகவோ அல்லது திட்டமிடப்பட்ட நேர இடைவேளைகளிலோ கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படும்.

5.தரவுப்பகுப்பாய்வும், பிரயோகங்களும் (Analysis & Application) (F&G)
செய்மதிகளால் அனுப்பப்பட்ட தகவல்களானது அங்கு முதல் படிநிலை தரமுயர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டு (வானிலையினால் ஏற்படுத்தப்படும் இடையுறுகள் நிவர்த்தி செய்யப்பட்டு) அத் தகவல்களை பிரயோகப்படுத்தும் திணைக்களங்களிற்கு அல்லது நிறுவனங்களிற்கு அனுப்பப்படும். அங்கு அவை உரிய பகுப்பாய்வுகளிற்கு உட்படுத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப் பயன்படும்.

புவியியல் தகவல் முறைமை (GIS) -- ஓர் அறிமுகம்

புவியியல் தகவல் முறைமை (GIS) என்பது, தகவல்களையும், இடஞ்சார் முறையில் புவியுடன் தொடர்பு குறிக்கத்தக்க வேறு தொடர்பான விடயங்களையும் பெறுதல், சேமித்தல், பகுத்தாய்தல், மேலாண்மை செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு முறைமை என வரையறுக்கமுடியும்.  

மனிதனது அன்றாட வாழ்வில் புவியில்சார் இடங்குறிப்பு என்பது மிகவும் அவசியமாகின்றது. இதற்காக அவன் பல்வேறு தொழில்நுட்பங்களையும் வரைபடங்களையும் ஆதிகாலத்தில் இருந்தே பயன்படுத்தி வந்ததையும் நாம் அவதானிக்க முடியயும். எனினும் புவியியல் தகவல் முறைமையில் வரைபடங்கள் என்ற ஓர் எல்லையை விடுத்து அதற்கு மேற்பட்ட சில தொழில்நுட்பங்களும் உள்ளடக்கப்படுகின்றது.

 புவியியல் தகவல் தொழில்நுட்ப முறைமையில் முக்கியமாக 05 கூறுகளை உள்ளடக்கியது.
1. கணினி மற்றும் அதனுடன் இணைந்த இலத்திரனியல் வன்பொருட்கள் (Hardware)

2.கணினி மென்பொருட்கள் (Software)

3. தரவுகள் (Data)

4. அணுகுமுறைகள் (Approaches)

5. மனித வலு (People)

ஏனெனில் இன்றைய புவியியல் தகவல் முறைமையானது முற்றுமுழுதாக கணினியினைச் சார்ந்ததாக அமைந்துள்ளதனால் இவை அவசியமானதாகவும் முக்கியமானதாகவும் காணப்படுகின்றன. மேலும் மனிதவலு அல்லது பயனர் எனப்படும் பொழுது குறிப்பிடப்பட்ட நபர் உரிய தொழில்நுட்ப பகுப்பாய்வு அறிவுடையவராக இருத்தல் அவசியம். இல்லையெனில் அவரால் குறிப்பிட்ட முறைமையை பயன்படுத்த முடியாமல் போகலாம்.

மேலும் GIS ஆனது, பல வரைபட அடுக்குகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி பகுப்பாய்வுகளை மேற்கொள்ள சந்தர்பம் அளிக்கின்றமையினால் பல்வேறுபட்ட தேவைகளிலும் ஆய்வுகளிலும் இத்தொழில்நுட்பம் இன்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது.

 இப் புவியியல் தகவல் முறைமையின் முக்கிய பயன்பாட்டுப் பகுதிகளாக பின்வருவன அமைகின்றது.
1. புவியியல் ஆய்வுகளும் கற்கைகளும்
2. விமானப் பயணங்களும் அவற்றினை ஒழுங்குபடுத்தும் கட்டமைப்புக்களும்
3. நீர் வடிகாலமைப்பு மற்றும் முகாமைத்துவமும்
4. இராணுவ பாதுகாப்பு மற்றும் குற்றவியல் துறைகள்
5. விவசாய முகாமைத்துவம் மற்றும் ஆய்வுகள் மதிப்பீடுகள்
6. கட்டுமானப் பணிகள்
7. வியாபார முகாமைத்துவம் மதிப்பீடுகள் மற்றும் எதிர்கால முன்னுரைப்புக்கள்.
8. பொருள்கள் சேவைகள் வழங்கலும் களஞ்சியப்படுத்தலும்
9. இடர் அனர்த்த முகாமைத்துவம்
10. சுற்றுச்சூழல் முகாமைத்துவம் மற்றும் ஆய்வுகள்
11. தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் இணைந்த சேவைகள்
12. வானிலை காலநிலை ஆய்வுகள் கற்கைகள்
13. மருத்துவ கற்கைகள் ஆய்வுகள்.
14. மீட்பு ம்றறும் தேடல்கள்

செய்மதி அடிப்படையிலான வழிச்செலுத்தலும் நிலையம் குறித்தலும் - அறிமுகம்

செய்மதி அடிப்படையிலான வழிச்செலுத்தலும் நிலையம் குறித்தலும் (Satellite Based Navigation & Positioning) ஆனது புவியைச் சுற்றி செய்மதிகளை வட்ட செய்மதி ஒழுக்கில் சுற்றச் செய்து அவற்றில் இருந்து அறியப்பட வேண்டிய புவிமேற்பரப்பு புள்ளிக்கான தூரத்தை அளப்பதன் மூலம் அப்புள்ளியின்
நிலையத்தைக் குறிக்கும் பொறிமுறையாகும்.

இப்பொறிமுறையை நிறைவேற்ற அல்லது இவ்வாறான தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு நாடுகள் வேறுபட்ட தொகுதிகளை அபிவிருத்தி செய்துள்ளன.

1. GPS - ஐக்கிய அமெரிக்க நாடுகள்
2. GLONASS - ரஸ்ஸியா
3. Galileo Navigation System - ஐரோப்பிய ஒன்றியம்
4. COMPASS - சீனக் குடியரசு

தற்பொழுதைய நிலையில் GPS மற்றும் GLONASS ஆகியவை முற்றுமுழுதான தொழிற்பாட்டில் உள்ளன. மற்றயவை இன்னும் சிறிது காலத்தில்தொழிற்படக்கூடிய நிலையில் உள்ளன. 

இவ்வாறான நிலையில் பலரும் நினைப்பது GPS என்றால் செய்மதி அடிப்படையிலான வழிச்செலுத்தலும் நிலையம் குறித்தலும் என்று அது தவறாகும். GPS ஆனது அத் தேவையைப் பூர்த்தி செய்யஅமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட ஓர் தொகுதியாகும்.

எனினும்  GPS GLONSS உட்பட அனைத்தும் ஓர் பொதுவான தொழிற்பாட்டு முறையையே கொண்டுள்ளன. ஆனால் GPS இன் ஆவணத்தொகுப்பு அதிக எண்ணிக்கையான தொழிற்படு செய்மதிகள் GPS இன் பெயரை பிரபலப் படுத்தியதுடன் அமெரிக்காவின் GPS பாவனை மீதான கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டதும் மேலுமொரு காரணம் ஆகியது.

எனினும் இன்று சந்தைகளில் மற்றும் இணைத்து பாவிக்கக் கூடிய கருவிகள் கிடைப்பதானது செய்மதி அடிப்படையியிலான வழிச்செலுத்தல் மற்றும் நிலையப்படுத்தலை இலகுவாக்கியுள்ளது.


செய்மதி அடிப்படையிலான வழிச்செலுத்தலும் நிலையம் குறித்தலும் - அடிப்படை

 செய்மதி அடிப்படையிலான வழிச்செலுத்தலும் நிலையம் குறித்தலிலும் தொடர்பான அறிவியல் பின்னணியை கருத்தில் கொள்ளும் பொழுது நாம் GPS தொகுதியினை உதாரணமாக கொண்டு விளங்கிக்கொள்வது இலகுவானது ஏனெனில் நான் முன்னர் குறிப்பிட்டது போன்று அனைத்து தொகுதிகளினதும் அடிப்படை ஒன்றாகும்.

இத்தொகுதியினை நாம் முக்கியமாக மூன்று பகுதிகளாக வகுத்துக்கொள்ளலாம்:
1. விண்வெளிப்பகுதி - Space Segment
2. கட்டுப்பாட்டுப் பகுதி - Control Unit
3. பயனர் பகுதி - Users Segment

விண்வெளிப்பகுதி:


இப்பகுதியில் 06 வட்ட ஒழுக்குகளில் குறைந்தது 24 செய்மதிகள் இயங்க வேண்டும் என்பது அடிப்படைத் தேவையாகின்றது. GPS தொகுதியல் தற்சமயம் 30 செய்மதிகள் இயங்கிக் கொண்டுள்ளன. இச் செய்மதிகள் 20 000 கி.மீ ஆரையுடைய வட்ட 55 பாகை சரிவுக்கோணத்தில் உள்ள ஒழுக்குகள் ஆறில் ஒவ்வொன்றிலும் 04 செய்மதிகள் வீதம் செயற்படவே ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது எனினும் எதிர்பார்கப்பட்ட வாழ்வுக்காலத்தைவிட அதிக காலம் செய்மதிகள் இயங்கிக் கொண்டு இருப்பதால் சில மேலதிக ஒழுக்குகள் பின்னர் சேர்க்கப்பட்ட பொழுதும் அவற்றின் ஒழுக்குகளும் 20000 கி.மீ ஆரையுடைய வட்ட ஒழுக்குகளாகும்.

இங்கு இயங்கிக்கொண்டிருக்கும் செய்மதிகளில் அணுக்கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது ஏனெனில் இன் நிலையக் கணிப்பீட்டில் நேரக்கணிப்பு என்பது மிகவும் முக்கியமானது 01 நனோ செக்கன்(0.0000001 செக்கன்) கூட 300 மீற்றர் வழுவை ஏற்படுத்தக் கூடும் (இக்கணிப்புகளைப் பற்றி பின்னைய பதிவுகளில் விரிவாகபா பார்ப்போம்). இந்த அணுக் கடிகாரங்களின் வழுவானது 1 x 10 ^(-13) செக்கன் அளவினதாகும்.
இக்கடிகாரங்கள் நேர்த்தியான நேரஇடைவெளிகளில் மின்காந்த அதிர்வுகளை வெளியிடுவதற்கும் பயனர் கருவிகள் தூரங்களை அளந்துகொள்ள முதல் தங்கள் மின்காந்த அலைகளின் பயண நேரத்தைக் கணிப்பிடவும் பயன்படுகின்றன.

இச் செய்மதிகனானது இருவகை PRN (pseudorandom noise) Code களினை அனுப்புகின்றது. அவையாவன C/A (Coarse/Acquisition) Code , P (Precision) Code எனப்படும் இருவகை டிஜிற்றல்அதிர்வுகளை வெளியிடுகின்றது. C/A Code ஆனது பொதுமக்கள் தேவைக்காக இலவசமாக வழங்கப்படுகின்றதுடன்  P Code ஆனது அமெரிக்காவின் இராணுவத் தேவைகளிற்காக மட்டும் பயன்படுத்தப்படுவதற்கானது. 

இவ் டிஜிற்றல் சமிக்ஞைகளின் அதிர்வெண் குறைவானதால் இவற்றை செய்மதிகளில் இருந்து நேரடியாக புவிக்கு அனுப்ப முடியாது எனவே இவை அதிர்வெண் கூடிய அனலொக் சமிக்ஞைகளுடன் கலக்கப்பட்டு புவிக்கு அனுப்பப்படுகின்றன. எமது FM ரேடியோக்களில் எவ்வாறு ஒலி அலைகள் மின்காந்த அலைகளினுடன் கலந்து அனுப்பப்படுகின்றனவோ அதைப்போல எனக் கருதலாம் எனினும் சிறிது வேறுபாடுகள் உண்டு.

கலந்து அனுப்பப்படும் பொழுது இவை இருவகை அதிர்வெண் கொண்ட அலைவீச்சுகளில் அனுப்பப்படுகின்றன. அவையாவன 1227.6 Hz மற்றும் 1575.42 Hz இவை முறையே L1 மற்றும்  L2 என அழைக்கப்படும்.

 L1 அலைகளில் CA Code மற்றும் P Code ஆகிய இருவகை டிஜிற்றல்அலைகளும் L2 அலைகளில் P Code மட்டும் கலந்துஅனுப்பப்படுகின்றன. இவ் டிஜிற்றல் அலைகளே பயனர் கருவிகளினால் செய்மதிக்கும் தமக்கும் இடையேயான தூரத்தைக் கணிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. (இவை பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம்)

இவ் டிஜிற்றல் அலைகள் மட்டுமல்லாது செய்மதிகள் பயனர் கருவிக்கு மேலும் சில தகவல்களையும் அனுப்புகின்றன. அதவாது செய்மதியின் நேரம் மற்றும் திகதி, செய்மதியினுடைய அந்தக்கணத்திலான அமைவிடம், செய்மதியினுடைய செயற்படும் தன்மை ஆகியவையாகும். இவை வழிச்செலுத்தல் தகவல்கள் (Navigation Message) என்று  அழைக்கப்படும். 

கட்டுப்பாட்டுப் பகுதி:


இப்பகுதியினுள் செய்மதிகளின் செயற்பாடுகள் தொடர்பான கண்காணிப்பு மையங்கள் அடங்கும். இவை செய்மதிகளின் ஒழுக்குகளில் ஏற்படும் மாற்றங்கள் அவற்றின் கடகாரங்களில் ஏற்படும் வழுக்கள் தொடர்பான கண்காணிப்புக்களை மேற்கொண்டு தலமைக் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும் அங்கிருந்து அவை செய்மதி தலைமை கட்டுப்பாட்டு மையத்தினை கடக்கும் பொழுது அவற்றிற்கு தரவேற்றம் செய்யப்படும்.


பயனர் பகுதி:

இப்பகுதியினுள் GPS இன் பயனாளர்கள் உள்ளடங்குவார்கள். அத்துடன் இங்கு முக்கியமான கருவியாக GPS Receiver (ரிசீவர் அல்லது பெறுநர்) கருவி அமைகின்றது. இக்கருவி தொடர்பாகவும் இதன் வகைகள் தொடர்பாகவும் இறுதிப்பகுதியில் கவனிப்போம்.

பென்ற்றிலி மென்பொருள்கள் - பொறியியல் வரைவு மற்றும் வடிவமைப்புக்கானது (Bentley Systems Inc - Software Collection for Engineering )

நாம் எல்லோரும் கணணி உதவியிலான வரைதலுகு(CAD) Auto CAD மென்பொருளினேயே பயன்படுத்துவதுடன் அது மட்டுமே இலகுவானது என்று நம்பிக்கொண்டும் இருக்கின்றோம். ஏனெனில் நாம் அது சம்பந்தமான புதிய மென்பொருட்களினைத்  தேடிக்கற்பதில் நாட்டமின்றியிருக்கின்றோம். 

ஆனால் இம் மென்பொருளைத் தவிர வேறு பல இவ்வகையான கணணி உதவியிலான  குறிப்பிட்ட சில வைகயான வரைதலிற்கு மிகச்  சிறந்தவையாக இருக்கின்றன. ஆயினும் அவற்றினை நாம் எமது சுயமுயற்சியில் இணையத்தள வீடியோக்களின் ஆதரவுடனேயே கற்க வேண்டியுள்ளது. ஏனெனில் அவற்றினைக் கற்பிக்கும் கல்வி நிலையங்கள் பெரும்பாலும் நமது நாட்டில் இல்லை என்பதாலாகும்.

ஆனால் நீங்கள் மேற்க்கத்தைய நாடுகளிலோஅல்லது மத்தியகிழக்கு நாடுகளிலேயோ வேலைக்குச் செல்வது என்று தீர்மானித்திருந்தால் மிக முக்கியமானதாகும்

அவ்வகையான மென்பொருள்தொகுதியில் Bentley Systems Inc இனால் வெளியிடப்படும்

  • மைக்ரோ ஸ்டேசன் (Micro Station)
  • பவர் சிவில் (Power Civil)
  • பென்ரிலி மப் (Bentley Map)
  • வாட்டர் ஜெம்ஸ் (Water GEMS)
  • சுவர் ஜெம்ஸ் (Sewer GEMS)

என்பன மிக முக்கியமானவை.


மைக்ரோ ஸ்டேசன் (Micro Station)

இது இருபரிமான முப்பரிமான கணனி உதவியிலான வரைதலுக்கு பெரும் உதவியளிப்பதுடன் இதன் இலகுவான பணனர் இடைமுகம், பல்வேறு வகையான கோப்புக்களினையும் பயன்படுத்தக் கூடிய தன்மை என்பவற்றுடன் மேலதிக பொறியியல் வடிவமைப்புக்களிற்காக வடிவமைப்பு மென்பொருள் தொகுதிகளில் பணன்படுத்தும் பொழுது எந்த வித மாற்றங்களினையும் மேற்கொள்ளாது தரவுக் கோப்புக்களினை பயன்படுத்தக் கூடிய தன்மையும் முக்கியமானதாகும்

பவர் சிவில் (Power Civil)

வீதி வடிமைப்பு மற்றும் தரைத்தோற்ற வடிவமைப்பு என்பவற்றிற்கு ஓர் மிகச் சிறந்த மென்பொருளாகும். ஏனெனில் பெரும்பாலான பொறியியல் பகுப்பாய்வுகளினை இதன் மூலம் நாம் மிக இலகுவாக செய்து கொள்ள முடிவதுடன் பல்வேறு பொறியியல் கணிப்புக்களினையும் இப்படியிருந்தால் எப்படியிருக்கும் என்பது போன்ற நிலைமைகளினைச் சோதித்துப்பார்க்கும் வகையிலான பகுப்பாய்வுகளினையும் செய்து கொள்ள முடிவது சிறப்பம்சமாகும்.
மேலும்  தரைத்தோற்ற அமைப்புக்களினை கணணியில் மாதிரியிடல் குறுக்கு வெட்டு மற்றும் நீள்வெட்டு வரைபுகளினை வரைதல், வெட்டியெடுக்கப்படும் மற்றும் நிரவும் அளவீடுகளினைகணிப்பிடுதல், சமவுயரக் கோடுகளினை வரைதல் போன்றன மற்றைய மென்பொருள்களில் கிடைக்காத சிறப்பம்சம் என்பதுடன் இது பல்வேறு வகையான தரவுத்தளங்களுடன் இணைப்பை மேற்கொள்ளும் வசதியுடனும் உள்ளதால் தரவுச் சேமிப்பும் இலகுவானதாகும்.

பென்ரிலி மப் (Bentley Map)

இது புவியியல் தகவல் தொகுதிக்கு முற்றுமுழுதான பயன்பாட்டினை வழங்குவதுடன் அது சம்பந்தமான பல்வேறு பகுப்பாய்வுகளினையும் செய்து கொள்ள முடிவதுடன் செய்மதிப் படங்களின் பகுப்பாய்வுகள் வரைபடம் தயாரித்தல் போன்றவற்றினையும் இலகுவாக மேற்கொள்ள வழியமைக்கின்றது.

வாட்டர் ஜெம்ஸ் (Water GEMS) / சுவர் ஜெம்ஸ் (Sewer GEMS)

வாட்டர் ஜெம்ஸ் மற்றும் சுவர்ஜெம்ஸ் என்பன முறையே குடிநீர் வடிகாலமைப்பு மற்றும் கழிவு நீர் வடிகாலமைப்புத் தொடர்பான வரைபுகளிற்கு மற்றும் திட்டமிடலுக்கு மிகவும் பயனுள்ளது. ஏனெனில் இவற்றினைக் கொண்டு நாம் திட்டமிடும் பொழுது அல்லது வடிவமைக்கும் பொழுது நாம் எந்தவிதக் கணிப்பீடுகளினையும் செய்யத் தேவையில்லாமல் இருக்கின்றது. தேவைப்படும் தரவுகளினை நாம் உள்ளீடு செய்யின் மென்பொருளானது எமக்கு அக்குழாய்களில் ஏற்படுத்தப்படும் அழுத்தம் வேகம் மற்றும் இதர பொறியியல் விபரங்களினைக் கணித்து எமக்கு வடிமைப்பில் தவறுகள் ஏற்படாதவாறும் வேகமாக வடிவமைப்பினை மேற்கொள்ளக் கூடிய வகையிலும் உதவுகின்றது

இலங்கையில் பயன்படுத்தப்படும் பொதுவான வரைபட ஆள்கூற்று முறைமை

இலங்கையில் முக்கியமாக மூன்றுவகையான வரைபட ஆள்கூற்று முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. 
1. இலங்கை வரைபட ஆள்கூற்று முறைமை 95 (SLD 95)
2. இலங்கை வரைபட ஆள்கூற்று முறைமை 99 (SLD 99)
3. WGS 84 UTM Zone 44 N

முதல் இரண்டு ஆள்கூற்று முறைமை இரண்டும் இலங்கை நில அளவைத் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டவை. முன்றாவது ஆள்கூற்றுமுறைமையானது அமெரிக்க இராணுவத்தின் பொறியியல் பிரிவினால் அறிமுகப்படுத்தப்பட்டது. 

SLD 95 , SLD 99  ஆகியவை கண்டாவள Datum இனைஅடிப்படையாகக் கொண்டமைந்ததாகும். UTM Zone 44 N ஆனது சர்வதேச WGS84 Datum  இனை அடிப்டையாகக் கொண்டது.

இப் புவியியல் ஆள்கூற்று முறைமைகளின் பொதுவான அளவுருக்கள். (Coordinates Parameters)

1.
SLD 95:

Kandawala_Sri_Lanka_Grid
WKID: 5234 Authority: EPSG

Projection: Transverse_Mercator
False_Easting: 200000.0
False_Northing: 200000.0
Central_Meridian: 80.77171111111112
Scale_Factor: 0.9999238418
Latitude_Of_Origin: 7.000480277777778
Linear Unit: Meter (1.0)

Geographic Coordinate System: GCS_Kandawala
Angular Unit: Degree (0.0174532925199433)
Prime Meridian: Greenwich (0.0)
Datum: D_Kandawala
  Spheroid: Everest_Adjustment_1937
    Semimajor Axis: 6377276.345
    Semiminor Axis: 6356075.41314024
    Inverse Flattening: 300.8017

2.
SLD 99:

SLD99_Sri_Lanka_Grid_1999
WKID: 5235 Authority: EPSG

Projection: Transverse_Mercator
False_Easting: 500000.0
False_Northing: 500000.0
Central_Meridian: 80.77171308333334
Scale_Factor: 0.9999238418
Latitude_Of_Origin: 7.000471527777778
Linear Unit: Meter (1.0)

Geographic Coordinate System: GCS_SLD99
Angular Unit: Degree (0.0174532925199433)
Prime Meridian: Greenwich (0.0)
Datum: D_Sri_Lanka_Datum_1999
  Spheroid: Everest_Adjustment_1937
    Semimajor Axis: 6377276.345
    Semiminor Axis: 6356075.41314024
    Inverse Flattening: 300.8017

3.
UTM Zone 44 N:

WGS_1984_UTM_Zone_44N
WKID: 32644 Authority: EPSG

Projection: Transverse_Mercator
False_Easting: 500000.0
False_Northing: 0.0
Central_Meridian: 81.0
Scale_Factor: 0.9996
Latitude_Of_Origin: 0.0
Linear Unit: Meter (1.0)

Geographic Coordinate System: GCS_WGS_1984
Angular Unit: Degree (0.0174532925199433)
Prime Meridian: Greenwich (0.0)
Datum: D_WGS_1984
  Spheroid: WGS_1984
    Semimajor Axis: 6378137.0
    Semiminor Axis: 6356752.314245179
    Inverse Flattening: 298.257223563


புவியின் உருவம்

புவியானது தட்டையானது என்று ஆரம்பத்தில் நம்பப்பட்டு வந்தது. எனினும் பின்னர் அக்கருத்தானது முற்று முழுதாகத் தவறு என்பது அறியப்பட்டு பூமியானது கோள வடிவமானது (Sphere) என்று அறியப்பட்டது. 

நீள்வட்டக் கோளத்தின்அமைப்பு

கோள வடிவம் என்றால் அதன் ஆரைகள் எப்பக்கத்தால் பார்ப்பினும் சமனாக இருக்க வேண்டும்.
அதாவது x 2y 2z 2r 2 என்ற கணித விதிக்கு அமைவாக அமைய வேண்டும். 

ஆனால் பூமியின் வடக்கு தெற்கான  விட்டமானது கிழக்கு மேற்கான விட்டத்திலும் பார்க்க குறைவாக இருக்கும் காரணத்தினால் பூமியானது கோள வடிவமானது என்ற கொள்கையும் பின்னாள்களில் கைவிடப்பட்டு பூமியானது நீள்வட்ட கோளம் (Ellipsoid) எனும் ஓர் முடிவிற்கு வந்தனர் ஆய்வாளர்கள்.



நீள் வட்டக் கோளமாக இருப்பின் 

எனும் சமன்பாட்டிற்கு அமைவாக அதன்அச்சுக்களின் நீளங்கள் அமைய வேண்டும் என்பது கணித விதி. ஆனால் புவியின் அமைப்பு அவ்வாறும் அமையவில்லை என்பதினைப் புவி மேற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட புவியீர்ப்பு விசை  தொடர்பான ஆய்வுகள் காட்டுகின்றன.

ஆகவே புவியானது ஒருஒழுங்கற்ற கோள அமைப்பினைக் (Geoid) கொண்டது என்பதே சரியானதாகும். 


என்ற கணிதச் சமன்பாட்டிற்கு அமைவான வடிவமாக அமைகின்றது. 
ஆனால் இக்கணிதச் சமன்பாட்டினை சாதாரண கணனிகள் தீர்பதென்பது மிகவும் சிக்கலானத என்ற காரணத்தினால் புவியின் வடிவமானது கணித ரீதியான செயற்பாடுகளிற்கு மட்டும் ஓர் நீள்வட்டக் கோளமாக கருதப்படுகின்றது. 
புவியின் வடிவம்

பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட புவியின் வடிவமாக WGS 84 கணிதச் சமன்பாட்டினைச் திருப்தி செய்யும் வடிவம் பயன்படுத்தப்படுகின்றது புவியியல் இடங்குறிப்புக் கணித்தல் செயற்பாடுகளில் (பூகோளரீதியான செயற்பாடுகள் பிராந்தியரீதியில் அப்பகுதிக்கு ஏற்ப வேறு வேறு வடிவங்கள் பயன்படுத்தப்படும். இதுதொடர்பாக டேற்றம் எனும் பதிவில் விரிவாக அலசப்பட்டுள்ளது). பயன்படுத்தப்படுகின்றது.

எனினும் இதற்கமைவாக கணிப்பீடுகளினைச் செய்யும் பொழுது பல பிராந்தியங்களில் தவறுகள் ஏற்படும். அத்தவறுகள் ஏற்படும் பிராந்தியங்களினை கீழ்வரும் உரு விரிவாகக் காட்டுகின்றது.

புவியியல் தகவல் தொழில் நுட்பம் மற்றும் செய்மதி ஒளிப்படங்களின் இராணுவப் பயன்பாடு

புவியியல் இடங்குறிப்பு தொழில் நுட்பமாயினும் சரி செய்மதித்
தொழில்நுட்பமாயினும் சரி அவை இராணுவ நோக்கங்களிற்காகவே ஆரம்பத்தில் கண்டறியப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டவையாகும். எனவே அவை அதிகப்படியான இராணுவப் பாவனையைக் கொண்டமைந்தவையாக உள்ள போதும் அவற்றின் சிவில் பாவனையும் அதிகமானவை.

இராணுவ பயன்பாடுகளில் முக்கியமான சில:

1.
இராணுவமானது எந்தப்பகுதியிலும் எந்த நேரத்திலும் வினைத்திறனுடன் இயங்க வேண்டுமாயின் அப்பகுதிக்கு செல்ல வேண்டிய பாதை அப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டிய பாதை என்பவற்றை தெளிவாக அறிந்திருக்க வேண்டும். அதாவது பாதைகள் அடங்கிய வரைபடம் மற்றும் அதில் தாங்கள் நிற்கும் நிலையத்தை விரைவாகவும் துல்லியமாகவும் அறிந்திடும் வசதியும் மிக முக்கியமானது. அதனடிப்படையில் புவியியல் இடங்குறிப்புத் தொழில்நுட்பமும் டிஜிற்றல் வரைபடங்களும் இதனை மிக இலகுவாக்குகின்றன. 

2.
எதிரியின் நகர்வுப் பகுதியினை அல்லது தமது நகர்வுப் பகுதியினை தமது தலைமைத்துவத்திற்கு அறிவிக்க வேண்டுமாயின் அங்கு இருக்கும் புவியியல் அடையாளங்களினை அல்லது பிரசித்தி பெற்ற கட்டடங்களை அடிப்படையாக வைத்து தகவல் பரிமாறல் என்பது திட்டமிடல்களிற்கும் தகவல் பரிமாற்றத்திற்கும் கடினமானதாக அமையும். அவ்வாறான நிலையில் இலகுவாக இடங்களைக் குறிக்கவும் அவற்றினைத் தலைமையுடனோ அல்லது பொறுப்பதிகாரிகளினுடனோ பகிர்ந்து கொள்ள உதவுகின்றது.

3.
இராணுவ நோக்கில் ஏவுகணைகளினையோ இல்லை மோட்டார் எறிகணைகளையோ வீச வேண்டும் எனில் தனது நிலைக்கும் எதிரியின் நிலைக்கும் இடையிலான நேர்கோட்டுத் தூரம் (இடப்பெயர்ச்சி) அறிதல் மிக அவசியமாகும். நாம் சாதாரணமாக பயன்படுத்தும் வீதியின் அடிப்படையிலான தூரம் இதற்குப் பயன்படாது. ஏனெனில் எமது எறிகணைகள் வீதியினால் பயணிப்பவை அல்ல. ஆகவே அவற்றினைக் கணிக்க இடங்குறிப்புத் தொழில்நுட்பமும் புவியியல் தகவல் தொழில்நுட்ப முறைமையும்மிக அவசியமாகின்றது.

4. இராணுவ புலனாய்வின் போது சில வெற்றுக் கண்ணுக்கு புலப்படா தகவல்கள், உருமறைப்பு செய்யப்பட்ட தகவல்கள் என்பனவும் மிக முக்கியமானவையாகும். உதாரணமாக ஆட்டிலறித் தளங்கள் கவசவாகனங்கள் என்பன வெற்றுக் கண்ணுக்குத் தெரியாத வகையில் சண்டைக் களத்தில் உருமறைப்புச் செய்யப்பட்டிருக்கும். அவற்றினை அவதானிப்பது என்பது சண்டையின் போக்கினை மாற்றக்கூடிய முடிவுகளை எடுப்பதற்கு முக்கியமானதாகும். இன்றைய செய்மதித் தொழில்நுட்பமானது இவற்றினை அவதானிப்பதினை மிக இலகுவாக்குகின்றது. எப்படியெனில் பொதுவான இராணுவ செய்மதிகள் பொருட்கள் வெளிவிடும் வெப்ப அலைகளைப் பதிவிட கூடிய தொழில்நுட்பங்களினைக் கொண்டுள்ளது. அதன்படி வழமைக்கு மாறான வெப்பநிலை மாற்றம் காணப்படின் அது எதிரியின் ரகசிய நடவடிக்கைக் குரிய ஓர் இடம் என்பது தெளிவாகும். உதாரணமாக தாவர இலைகுழைகளால் உருமறைக்கபட்ட ராங்கியொன்று வெளி பார்வைக்கு தாவரம் மாதிரித் தெரிந்தாலும் அதன் வெப்பநிலையானது தாவர வெபடபநிலையை விட அதிகமாகும். ஆகவே தகவல் பகுப்பாய்வாளருக்கு தெளிவாக விளங்கும் அது தாவரமில்லை என்பது. அத்துடன் அது நகர்கின்றதா என்பதினை அடுத்த செய்மதிப்படத்துடன் ஒத்துப் பார்தால் அது ராங்கியா இல்லையா என்பதும் புரிந்துவிடும். இவ்வாறு தான் இன்றைய போர்க்களங்களில் எதிரியின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்படுகின்றன.

தொடரும்

நகரத்திட்டமிடலும் புவியியல் தகவல் முறைமையும் (GIS Applicability in Town Planning)

நகரத்திட்டமிடல் என்பது நிலைத்து நிற்கக் கூடியதும் சுபீட்சமானதுமான மனித வாழ்க்கைக்கான உச்ச நிலப்பாவனைக்குரய வகையிலான தூரநோக்குடன் அபிவருத்தியினை ஒழுங்கமைத்தல் என்று கொள்ளலாம். எனவே இங்கு பயன்படுத்தப்படும் பெரும்பாலான தகவல்கள் இடம் சார்ந்ததாகவே அமைகின்றன என்பது வெளிப்படையானதாகும்.

எமதுபொதுவான தரவுத்தளங்களில் பகுப்பாய்வு மென்பொருள்களில் இவற்றை பயன்படுத்த வேண்டுமாயின் இடம்சார் தரவுகளை கைவிட்டு பகுப்பாய்வு செய்ய வேண்டிய நிலைமை உருவாகும். இது ஏற்றுக் கொள்ளககூடியதல்ல. ஆகவே இவ்வாறான இடம்சார்பான தகவல்களினை பொதுவான தரவுத் தளங்களிலும் மென்பொருட்களிலும் சேமித்தல் பகுப்பாய்வு செய்தல் என்பது வினைத்திறன் குறைவானதாக அமையும் அல்லது பொருத்தமான முடிவுகளை எடுப்பதற்குரிய நம்பிக்கையான முடிவுகளினைத் தராது. அதற்காகவே நாம் இடம்சார் தரவுகளினைக் கையாள்வதற்கு ஓர் சிறப்பான பொறிமுறை தேவைப்படுகின்றது.

எனவே இச்சிக்கலினைக் கையாள்வதற்காகவே புவியியல் தகவல் முறைமையானது முக்கியத்துவம் பெறுகின்றது. புவியியல் தகவல் முறையில் எந்தவொரு தரவுகளுடனும் அதற்குரிய இடம் அடையாளப்படுத்தப் படுவதனால் பகுப்பாய்வாளர் அல்லது நகரத்திட்டமிடலாளர் பிரதேசத்திற்குரிய தரவு மாதிரியொன்றை ஏற்படுத்த முடிகின்றது. அத்துடன் பகுப்பாய்வின் முடிவுகளினை மீள அமுல்படுத்த முயலும் போதும் தெளிவாக இடத்தினை அறிந்து நிறைவேற்ற முடிகின்றது.


தரவு சேகரித்தல் பொறிமுறைகள் (Data Collection Mechanism)

எந்தவொரு சிறப்பான முடிவெடுத்தலுக்கும் பொருத்தமான தரவுகள் பொருத்தமான நேரத்தில் கிடைக்கப் பெறுதல் வேண்டும் அவ்வாறே நகரத்திட்டமிடலுக்கும் தரவு சேகரித்தல் என்பது முக்கியத்துவமானது. தற்போதைய காலத்தில் புவிமேற்பரப்புடன் தொடர்புற்று நிற்கக் கூடிய முறையில் தகவல் சேகரிப்பிற்கு பல்வேறு முறைகள் பயன்படுத்தப் படுகின்றன.

1. செய்மதித் தரவுகள் (Satellite Data) 
செய்மதி ஒளிப்படங்களானது புவி மேற்பரப்பின் நிலப்பாவனை மற்றும் தரைத்தோற்றம் என்பவற்றை பகுப்பாய்வு செய்வதற்கு பயன்படுகின்றது. உதாரணமாக நகரத்திட்டமிடலில் கடல் மட்டத்தில் இருந்தான நில உயர வேறுபாடுகளானது அந்நிலத்தின் பயன்பாட்டைத் திட்டமிடலில் முக்கியத்துவம் பெறுகின்றது. இதனை நாம் எமது மரபுசார் முறையான நில அளவையியல் மூலம் பெற்றுக்கொள்ளமுயலுமிடத்து பெரும் பொருள் செலவும் கால விரயமும் ஏற்படும். ஆனால் இவற்றை செய்மதி ஒளிப்படங்கள் மூலம் பெற்றுக் கொள்ளமுயலுமிடத்து மிகக் குறுகிய காலத்திலும் மிகக் குறைந்த செலவிலும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக அமையும். அத்துடன் இறுதியாக விண்வெளிக்கு ஏவப்பட்ட வர்த்தக செய்மதியான வேல்ட்வியூ 3 இன் உதவியுடன் நாம் 0.5 மீற்றர் துல்லியத்தன்மையுடைய உயர வேறுபாடுகளினைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இச் செய்மதி ஒளிப்படங்கள் மூலம் தற்போதைய நிலப்பயன்பாடு மற்றும் அதன் மாற்றங்கள் தொடர்பான வரலாற்றுத் தகவல்கள் என்பவற்றை துல்லியமாக பெற்றுக்கொள்ள முடிவதுடன் நம்பகத்தன்மையும் அதிகமாகும்.

2. இணைய அடிப்படையிலான தரவு சேகரித்தல் (Web Based Data Collection Methods)
வேகமாக மாறிவரும் இணைய அமைப்பிற்கேற்ப தகவல் சேகரிப்பிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதனiடிப்படையில் இணையம் சார் புவியியல் தகவல் வேகரிப்பு முறைமையானது முக்கியத்துவம் பெறுகின்றது. உதாரணமாக சமூகம் சார் தகவல்களினைத் திரட்டும் பொழுது பொதுமக்கள் பங்களிப்புடன் தகவல் சேகரிப்பது இலகுவானது. அத்துடன் இம்முறையில் பல்வேறு பயனர் இடைமுகங்களினூடாக தரவுகளினை உறுதிப்படுத்தும் பொறிமுறைகளினையும் அமுல்படுத்தக் கூடியவாறாக அமைகின்றது. உதாரணமாக கூகுள் நிறுவனத்தின் Google Map , மற்றும் உள்ளுர் நிறுவனமான ஜியோ இனடபோமற்றிக்ஸ் உடைய Landgatelanka  ஆகியன உதாரணங்களாக குறிப்பிடக்கூடியவையாகும்

3. புவியிடங்காட்டியுடன் கூடிய இலத்திரனியல் கருவிகள் (GPS Enabled Data Loggers)
இவ்வாறான உபகரணங்களின் உதவியுடன் நேரடியாகக் கள உத்தியோகத்தரினால் தகவல் சேகரிக்கப்படலாம். புவியிடங்காட்டி தெரிவின் போது அதன் துல்லியத் தன்மை கணக்கிலெடுக்கப்பட வேண்டியமை முக்கியத்துவமாகும் அத்துடன் தகவல் சேகரிப்பாளரின் வழுவாத் தன்மையும் முக்கியமமானதாகும்.

4. முப்பரிமாண மாதிரிகள் (3D Models)
இன்று சாதாரண புகைப்படங்களினைக் கொண்டு முப்பரிமாணக் காட்சிகளினை ஏற்படுத்தக் கூடிய மென்பொருள்கள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றில் குறிப்பிட்டுக் கூறக்கூடியது யுஉஉரவந 3D. இவ்வாறான மென்பொருள்களினுடாக தற்போதைய நகரத்து நிலையினை மாதிரியை அலுவலக கணனித்திரையில உருவாக்கி மிகத் தெளிவாக அலவலகத்தில் இருந்து கொண்டே முடிவெடுக்க உதவியாக இருக்கும்
எனினும் எவ்வாறான முறையில் தகவல் சேகரிப்பு என்பது முற்று முழுதாக திட்டமிடலாளரின் தேவையினைப் பொறுத்ததும் அவரிற்கு தேவையான துல்லியத் தன்மையின் அடிப்படையிலேயுமாகும். எனினும் பொதுவாகத் நகரத் திட்டமிடல் எனும் பொழுது 2- 5 மீற்றர் துல்லியத் தன்மை போதுமானது என்பது பொதுவான கருத்தாகும்.

தகவல் பகுப்பாய்வு (Data Analysis)

சேகரிக்கப்பட்ட தரவுகள் பொரு;தமான முடிவுகளினை மேற்கொள்ளத் தக்க வகையில் பகுப்பாய்வு செய்யப்படுதல் முக்கியமானதாகும். இதற்கு தற்காலத்தில் பல்வேறு வகையான மென்பொருட்கள் பாவிக்கப்படுகின்றன. இதற்கு வர்த்தக ரீதியான அல்லது திறந்த மூல மென்பொருள்கள் பாவிக்கப்படலாம். எனினும் இலங்கையின் பொருளாதார நிலமையில் வர்த்தக ரீதியான முழுமையான புவயியல் தகவல் முறைமை மென்பொருள்களினைக் கொள்வனவு செய்தல் என்பது சிக்கலான ஒன்றாகும் எனவே குறைந்த பெறுமதியிலான Mapinfo Bentley Map போன்ற மென்பொருள்களினையோ அல்லது திறந்தமூல மென்பொருள்களினையோ (Free and Open Source Software)  பாவிக்க முடியும். எனினும் பொதுவான தரவு மேலாண்மைக்கு (Data Management)  திறந்த மூல மென்பொருள்கள் பயன்படுத்தப்பட்டினும் முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய பொறியியல் கணிப்புக்கள் உள்ளடங்கிய பகுப்பாய்வுகளிற்கு (Analysis)  திறந்தமூல மென்பொருள்களின் நம்பிக்கைத் தன்மை சற்று தளம்பலாகவே காணப்படுகின்றது.

தரவு பகிர்வு (Data Sharing)

திட்டமிடல் அணியினிற்குள் தரவுப் பகிர்வு என்பது மிக முக்கியமானதாகும். இல்லையெனில் வேலைப் பகிர்வு குறித்த காலப்பகுதியினுள் குறிப்பிட்ட வேலையினை முடித்தல் என்பன சிரமமாக அமையும். இவ்வாறான சிக்கல்களினை தவிர்க்குமுகமாக இணையத்தள அடிப்படையில் இயங்கும் புவியியல் தரவுத்தளங்களை; அல்லது எமது தேவைக்கேற்ப கட்டமைத்துக் கொள்ளக் கூடிய வகையில் அமைந்த திறந்த முல செயலிகளினைக் கொண்டு வடிவமைக்கப்ட்ட தரவுத்தளங்களைப் பாவிப்பதானது வினைத்திறனுடையதாக அமையும்.

தரவு தகவல் காட்சிப்படுத்தல் (Data Visualization)

எப்படிப்பட்ட வேலையானாலும் இறுதிக் காட்சிப்படுத்தலில் தான் அதன் நிறைவுத் தன்மை அடங்கியுள்ளது. அதிலும் நகரத் திட்டமிடல் போன்ற வடிவமைப்பு வேலைகளில் சிறப்பான காட்சிப்படுத்தல் இல்லையானல் எமது முடிவுகளினை வெளிப்படுத்தல் சிரமமானதாக அமையும். அதனால் முடிவுகளினை சிறப்பாக வெளிப்படுத்த வரைபடங்களினை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்ற நிலமை தற்பொழுது இல்லை. முப்பரிமாணக் காட்சிகள், இப்படியானால் எப்படியிருக்கும் என்ற பயனரின் கோரிக்கைக்கமைவான மாற்றங்களை வெளிப்படுத்தும் இருபரிமாண/ முப்பரிமாண வெளிப்பாடுகள் அல்லது அட்டவணைகள் அறிக்கைகள் என பல்வேறு விதங்களில் காட்சிப்படுத்தக் கூடியதாக மென்பொருள்கள் இன்று கிடைக்கப் பெறுகின்றன.

இவ்வாறு மாறிவரும் உலகத்திற்கும் தொழில்நுட்பத்திற்கும் ஏற்ப நாமும் எமது திட்டமிடல் துறையில் மாற்றங்களினைக் கொண்டு சிறப்பான தூரநோக்குடைய நகரத்திட்டங்களினை தெளிவான பகுப்பாய்வுகளினை மேற்கொண்டு சரியான நேரத்தில் சரியான முடிவுகளினை எடுக்கக் கூடிய வகையில் ஏற்படுத்தப் போகின்றோமா? இல்லை பழமையான முறையில் நேரத்தினை விரயமாக்க கூடியவகையில் தொடரப்போகின்றோமா? என்பது எமது தொழில்நுட்ப தேடலிலே தங்கியுள்ளது

யாழ்ப்பாணமும் குடிநீரும்

யாழ்ப்பாணமானது முற்று முழுதாகநிலத்தடி நீரினை நம்பியுள்ள ஓர் பிரதேசமாகும். அதனால் அதன் இருப்பை உறுதி செய்வதே யாழ்ப்பாணத்தின் குடிப்பரம்பலைத் தக்க வைக்கும் ஓரே மார்க்கமாகும்

யாழ்குடாநாட்டின் பல பிரதேசங்களின் நிலத்தடி நீரினில் மசகெண்ணை கலந்துள்ளமையினால் அந்நீர் பாவனைக்குதவாது மாறும் சிக்கல் நிலமை உருவாகியுள்ள நிலையில், அப்பிரதேச மக்களுக்கு நீர் வழங்குவதற்காக மற்றைய பிரதேசங்களில் இருந்து நிலத்தடி நீரானது அதிகமாக உறிஞ்சப் படுவதால் அப்பிரதேசங்களும் கடும் பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும். உதாரணமாக நிலத்தடி நீர் வெளியேற்றப்படுவதனால் ஏற்படும் இடங்களிற்கு கடல் நீர் உட்புகும் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது ஓர் பாரிய சவாலாகும்.
இவ்வாறான நிலமையில் நிலத்தடி நீரின் மட்டத்தினை உயர்த்துவதற்கும் நிலையாகப் பரமரிப்பதற்கும் யாழ்ப்பாண குடிநீரேரித் திட்டம் என்ற நீண்டகால சுற்றாடல் நட்பான திட்டம் ஒன்று 1879 களில் அன்றைய வடக்குமாகாண ஆளுநர் Twyneham அவர்களால் பரீட்சார்த்த முறையில் ஆரம்பிக்கப்பட்டது.

பின்னர் 1916களில் இத்திட்டமானது முழுமையாக Horseburge எனும் ஆளுநரால் அமுல்படுத்தப்பட்டது.1920 தொடக்கம் 1923 காலப்பகுதியில் இவ்வேலத்திட்டங்கள் முழுமையாக பூர்த்தியடைந்தன. (இத்திட்டம் தொடர்பான முழுமையான விபரங்களிற்கு)

எனினும் இத்திட்டத்தினை முழுமையாக அமல்படுத்தி பராமரிக்க பின்னர் வந்த அரசுகளும் போர்க்கால சூழலும் பெரிதும் இடங்கொடாமையால் இத்திட்டம் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியினைத் தர தவறியமையே இன்று வடமராட்சியின் பல பகுதிகளும் தட்டுவன்கொட்டி உட்பட ஆனையிறவின் பல பகுதிகளும் குடிநீர் பிரச்சனையை எதிர்கொள்வதற்கான காரணமாகும்.

எனவே எண்ணைக் கலப்பு என்ற ஓர் காரணத்தினை மட்டும் மின்னுற்பத்தி நிறுவனத்திற்கு எதிரான பிரச்சாரங்களை மட்டும் கொண்ட போராட்டங்களை செய்து கொண்டிருக்காது நீண்டகால நிலையான அபிவிருத்திக்கான திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய தருணம் இது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இரணைமடு குளத்து நீரினை யாழ் கொண்டு செல்கின்றோம் மகாவலி நீரினை வன்னி கொண்டு வருகின்றோம் என்ற திட்டங்கள் இயற்கைச் சூழலில் பாரிய மாற்றங்களினை ஏற்படுத்துவனவும் சமூக கட்டமைப்புக்களில் குழப்பங்களினை ஏற்படுத்த வல்லவனாகவும் அமைவது மட்டுமன்றி பொருளாதார ரீதியில் பாரிய சுமையினை ஏற்படுத்துவதுடன் இது ஓர் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியாகவும் இருக்காது.

சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் ஓர் மாற்றத்தினை ஏற்படுத்தக் கூடியதாகஅமையினும் இம் மாற்றம் அரசியல் தலமைகளிற்கு அழுத்தம் கொடுக்காதவிடத்து இதனால் பயன் இல்லை. ஏனெனில் திட்டங்கள் தொடர்பான முடிவுகள் அரசியல் தலைமைகளால் மட்டுமே எடுக்கப்படுகின்றன. ஆனால் எம் யாழில் அரசியல் தலைமைகள் இனவாத அடிப்படையில் சகலதையும் மக்களைப் பார்க்கும் விதத்தில் மாற்றியமைத்து தங்களது அரசியல் இருப்பை தக்கவைக்கும் முயற்சியில் உள்ளமையினால் இவ்வாறான தூரநோக்கு திட்டங்கள் அமல்படுத்துவது சாத்தியமில்லை என்பது மட்டும் தெளிவு.

எனவே இன்றைய நிலையில் எமது அரசியல் தலைமைகள் மற்றும் சூழலியலாளர்கள் விட்ட தவறுகளே இன்று நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளே தவிர சுன்னாகம் மின்னுற்பத்தி நிறுவனம் மட்டுமல்ல. ஆனால் இந்த ஓர் எச்சரிக்கை நிலைமை ஏற்பட்டிருக்காது விடின் யாழ்ப்பாணம் குடிநீர்இன்றி 20 ஆண்டுகளில் தவிக்கும் நிலையை சற்று தளர்தியிருக்கின்றது. ஏனெனில் இன்றைய விழிப்புணர்வு சிறிதேனும் மாற்றத்தினை அரசியல் தலைமைகளிடம் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை.

யாழ்ப்பாண கடல் நீரேரித் திட்டம்

யாழ்ப்பாணமானது எந்தவித மேற்பரப்பு நன்னீர் ஆதாரங்களையும் கொண்டிராத ஓர்பகுதியியாகும். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மழைநீர் தேங்கி நிற்கும் குட்டைகள் உள்ள போதும் இவை பெரியளவிலான மக்கள் தேவைகளினைப் பூர்த்தி செய்யத் தேவையான வழங்கலை தர முடியாதவை மட்டுமல்ல வரட்சிக்காலத்தில் வற்றிப் போய்விடுவனவும் கூட.

ஆனால் யாழ்ப்பாணமானது தேவைக்கதிகமாக உள்நாட்டு கடல்நீரேரிகளைக் கொண்டுள்ளது. ஆனால் அவை உவர்நீர்ப் பிரதேசங்களாக உள்ளமையே சிக்கலானது. ஆகவே இவற்றின் உவர்நீர்த் தன்மையை மாற்றி நன்னீர் கடல்நீரேரிகளாக மாற்றியமைப்பின் யாழ்குடாநாட்டின் நீர்த்தேவை தொடர்பான பிரச்சனைகள் தீர்வடைந்துவிடும்.

இதற்கான திட்டமே யாழ்பாண கடல்நீரேரித் திட்டம் ஆகும். இது ஓர் அண்மைக்காலத் திட்டமல்ல. 1879களில் அப்போதைய ஆளுநரால் முன்மொழியப்பட்டு பரீட்சிக்கப்பட்டு பின்னர் பல்வேறு மேம்படுத்தல்களிற்கு உள்ளாக்கப்பட்ட திட்டமொன்றாகும்.

யாழ் கடநீரேரித் திட்டம்


யாழ்ப்பாணமானது பிரதானமாக 03 கடல்நீரேரிகளினைக் கொண்டது. அவையாவன 
1. வடமராட்சி கடல்நீரேரி
2. உப்பாறு
3. ஆனையிறவுக் கடல்நீரேரி.

1879களில்முன்மொழியப்பட்டதிட்டமானது வடமராட்சிக் கடல்நீரேரியினை தொண்டமனாறு பகுதியில் மறித்து ஓர் அணையைக் கட்டுவதன் மூலம் அப்பகுதியில் கிடைக்கும் மழைநீர் முழுவதும் கடலினுள் செல்வதைத் தடுத்துபெருமளவினை அப்பகுதியில் சேர்த்துவைப்பதன் மூலம் அப்பிரதேசத்தின் உப்புச் செறிவினை படிப்படியாக குறைத்தலாகும். இதே போன்று உப்பாறினையும் நாவற்குழிப் பகுதியில் மறித்து அணை ஒன்றைக் கட்டுவதன் மூலம் அப்பகுதியினையும் நன்னீர்த் தேக்கமாக மாற்றியமைத்தலாகும். 
 1879களில் வடக்குமாகண பகுதிக்கு பொறுப்பாகவிருந்த ஆங்கிலேய ஆளுநரான Twyneham என்பவர் ஆரம்ப சாதகநிலைமைகள் தொடர்பான கற்கைகளினை மேற்கொண்டு அறிக்கையிட்டிருந்தார். பின்னர் 1916களில் அப்போதைய ஆளுநராக கடமையாற்றிய Horseburge என்பவர் இதற்கான செயற்றிட்டத்தினை முன்னெடுத்திருந்தார். எனினும் அன்று அவரது காலம் பிரிட்டிஷ ஆட்சியின் இறுதிக் காலமாக அமைந்த காரணத்தினால் நிதி ஒதுக்கீடுகளில் சிக்கல்கள் காணப்பட்டதன் காரணமாக தற்காலிக செயற்றிட்டமாகவே இதனை பலகைகள் கொண்டுவடிவமைத்திருந்தார்.

இத்திட்டத்தின் குறைபாடுகள்:

இயற்கையான நீரோடத்தினைக் கட்டுப்படுத்தி நீரினைச் சேகரிக்கும் முயற்சியாகையால் பல விவசாய நிலங்கள் பயன்படுத்த முடியாத நிலமைக்கு உள்ளானமை.

நீரோட்டம் இல்லாத காரணத்தினால் உவர்த்தன்மை கழுவியகற்றல் தொழிற்பாடு இல்லாது போனமை. அதன்காரணமாக உப்புத் தன்மை பூரணமாக இல்லாது போக நீண்டகாலம் செல்லும் நிலையேற்பட்டமை.

Webb மேம்படுத்தல்
பின்னர் 1942 களில் பிராந்திய நீர்பாசன பொறியியலாளராக இருந்த என்பவர் இது தொடர்பாக விரிவான ஆய்வுகளினை மேற்கொண்டு தனது முன்மொழிவுகளினை 1945 களில் வெளியிட்டார். அவரின் முன்மொழிவுகளின் அடிப்டையில் அரியாலை மற்றும் தொண்டமனாறு சுழல்கதவுகளுடன் கூடிய அணைகள் அல்லது தடுப்புக்கள் அமைக்கப்பட்டன. இவ் வேலைத் திட்டங்கள் 1955 களில் பூரணமாகின. 

யாழ்பாணத்திற்கான ஆறு

பின்னர் பிராந்திய நீர்ப்பாச பொறியிலாளராகவும், தேசிய நீர்பாச பொறியிலாளராகவும் கடைமையாற்றிய ஆறுமுகம் அவர்களினால் யாழ்பாணத்திற்கான ஆறு எனும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவும் யாழ்கடனீரேரித் திட்டத்தின் ஓர் மேம்படுத்தல் ஆகும். 
இத் திட்டமானது வட மாகாணம்முழுவதும் ஓர் நீரோட்டத்தினை ஏற்படுத்துவதன் மூலம் உக்புச் செறிவினை விரைவாக அகற்றல், நன்னீர் மேற்பரப்புக்களை அதிகரித்தல் என்பதன் மூலம் சுற்றுச் சூழலைத் தரமுயர்த்தும் நடவடிக்கையாகும்.

வன்னிப் பகுதியில் பொழியும் மழையின் வெள்ளமானது இரணைமடு குளத்தினை சென்றடைகின்றது. இதன் அதிகப்படியான நீரானது உரியன் பகுதியினூடக வழிந்து சென்று ஆனையிறவுக் கடல்நீரேரிப் பகுதியில் வீழ்கின்றது. 
ஆனையிறவுக் கடல்நீரேரியானது கண்டி வீதி மற்றும் சுண்டிக்குளம் வீதி ஆகியவற்றினால் கடலில் இருந்து வேறுபடுத்தப்படுகின்றது. இப்பகுதிகளில் முறையான சுழல்கதவுகளினை அமைப்பதன் மூலமும் இரணைமடு பிரதேசத்தில் இருந்து கனகராயன் ஆற்றினால் கொண்டுவரப்படும் மழைநீரினைப் பயன்படுத்தியும் இவ் ஆனையிறவுக் கடல்நீரேரியினை நன்னீராக்குவது இத்திட்டத்தின் முதல் படி.

பின்னர் ஆனையிறவு கடல்நீரேரி மற்றும் உப்பாறு என்பவற்றைத் தொடுப்பதன் மூலம் ஓரு நீரோட்டத்தினை ஏற்படுத்தி யாழ்பாணத்திற்கான ஓர் ஆற்றினை உருவாக்குவதே இத்திட்டத்தின் இறுதியாகும்.

இத்திட்டத்தின் அடிப்படையில் ஆனையிறவு கடனீரேரி அபிவிருத்திகள் 1962 களில் ஆரம்பிக்கப்பட்டதுடன் 2.5 கி.மி நீளமான ஆனையிறவு வடமராட்சி கடனீரேரிகளின் தொடுப்பு கால்வாய் அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டன. 

எனினும் பின்னர் நிதி ஒதுக்கீடுகளில் ஏற்பட்ட சிக்கல்களும் நாட்டின் போர்ககால சிக்கல்களும் அபிவிருத்திப்பணிகளினை இடையு}று செய்து மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளையும் அழித்து இன்று யாழ்குடாநாடு நீரி பிரச்சனைக்கு முகம் கொடுக்க தூண்டிவிட்டது.

மனிதநேய கண்ணிவெடியகற்றல்


மனிதநேய  கண்ணிவெடியகற்றலானது இராணுவத் தேவைகள் எதுவுமின்றி பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக மட்டும் மிதிவெடி அகற்றப்படுவதனைக் குறிக்த்து நிற்கின்றது. மனிதநேயக் கண்ணிவெடியகற்றல் இராணுவத்தினாலோ அல்லது தொண்டு நிறுவனங்களினாலோ முன்னெடுக்கப்படலாம். பொதுவாக சர்வதேச நாடுகளின் உதவியுன் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இச்செயற்பாட்டை உலகெங்கும் முன்னெடுக்கின்றன. 

இம் மனிதநேய கண்ணிவெடியகற்றலை ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் மிதிவெடி செயற்றிட்ப்பிரிவு (UNDP Mine Action) ஒருங்கிணைத்தல், தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் தர உறுதிப்படுத்தலை மேற்கொள்கின்றது.
மிதிவெடியகற்றலில் சர்வதேச மிதிவெடியகற்றல் தரநிர்ணயத்திற்கு   (International Mine Action Standard - IMAS) அமைவாக மிதிவெடியகற்றும் அமைப்புக்களால் தங்களுக்கு பொருத்தமான செயற்பாட்டு நடவடிக்கை நியமங்கள் (Standard Operations Procedures - SOP) உருவாக்கப்பட்டு பின்பற்றப்படும். இதனை ஐக்கியநாடுகள் மதிவெடியகற்றல் பிரிவு உறுதிப்படுத்துகின்றது. 

கண்ணிவெடியகற்றல் என்பது, யுத்தத்தின் பின்னரான வெடிக்கும் எச்சங்கள் யாவும் அகற்றப்படுவதனைக் குறிப்பிடப்படுவதாகும். இதனுள், வெடிக்காத வெடிபொருள்கள், மதிவெடிகள், பொறிவெடிகள் மற்றும் வாகன எதிர்பு கண்ணிவெடிகள் என போரின் எச்சங்கள் பலவும் அடங்கும். பொதுவாக சர்வதேச மிதிவெடியற்றல் நியமங்களின் படி 01cm3 இற்கு அதிகமான வெடிபொருள் உள்ள அனைத்து வெடிபொருட்களும் அகற்றப்பட வேண்டியவையாக  அறிவுறுத்துகின்றது.

களமுனைகளில் மிதிவெடிகளின் பயன்பாடு


களமுனைகளில் மிதிவெடிகள் புதைக்கப்படுவது எதிரியின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக அல்ல. எதிரியின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்துவதற்காகவே களமுனைகளில் மதிவெடிகள் புதைக்கப்படுகின்றன. மிதிவெடிகள் காரணமாக முன்னேறும் எதிரிகளின் அணியில் ஏற்படும் காயங்கள் மீதமுள்ள போர்வீரர்களை வேறுபாதையினூடாக திசைதிருப்புவது மட்டும் இன்றி அவர்களிற்கு உளவியல் ரீதியான தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றது. இதன் காரணமாக ஏற்படும் நேர இடைவெளியில் பின்வாங்குதல், மீள ஒன்றிணைதல் போன்ற களமுனைச் செயற்பாடுகளிற்கு நேரம் கிடைக்கக் கூடியவாறாக அமைகின்றது.

மேலும் களமுனைகளில் மதிவெடிகள் களமுனையின் தன்மைக்கேற்றவாறு புதைக்கப்படும் விதம் எண்ணிக்கை என்பன மாறுபடும். பொதுவாக எல்லைப்புற போர்முனைகளில் (சூன்ய பிரதேசத்தில்) மிதிவெடிகள் புதைக்கப்படும் பொழுது செறிவாகவும் பின்வரும் அமைப்புக்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது பலவோ பயன்படுத்தப்படக்கூடும்

1. நேர்கோட்டு முறை (Line Pattern) : இம் முறையில் மதிவெடிகள் புதைக்கப்படும் பொழுது பொதுவாக பல நிரைகளில் மிதிவெடிகள் புதைக்கப்படுவதுடன் ஓர் நிரையில் உள்ள மிதிவெடிகளிற்கிடையிலான தூரம் 1 தொடக்கம் 02 மீற்றர்களிற்கு இடையில் அமைவதுடன் நிரைகளிற்கு இடையிலான தூரம் பொதுவாக 10 மீற்றர்களிற்கு மேற்படாதவாறும் அமைகப்படும்.

02. "T" வடிவமுறை ( T Pattern) : இம் முறையில் 04 மதிவெடிகள் புதைக்கப்படுவதுடன் ஒவ்வொரு 'T' யும் ஒன்றுக்கொன்று தலைகீழாக அமையுமாறும் புதைக்கப்படுவது வழமையாகும்.

03. முறிகோட்டு வடிவமுறை (Zigzag Pattern): இம்முறையில் மிதிவெடிகள் புதைக்கப்படும் பொழுதும் ஒன்றுக்கு மேற்பட்ட  நிரைகளில் புதைக்கப்படுவது வழமையாகும்

மிதிவெடி புதைகப்படும் வடிவமைப்புக்கள்
எனினும் களமுனைகளில் இருந்து தந்துரோபாய பின்வாங்கல்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் பொழுது பொதுவாக எவ்வித வடிவமைப்புக்களும் இல்லாமலே மிதிவெடிகள் புதைக்கப்படும். ஏனெனில் இங்கு மிதிவெடிகள் புதைக்க நேரம் கிடைக்காது என்பது மட்டுமல்ல மதிவெடிகள் ஒழுங்கின்றி புதைக்கப்பட்டிருக்கும் பொழுது எதிரியால் வேகமாக முன்னேற முடியாது. இந்த சிறிய நேர இடைவெளி பாதுகாப்பாக பின்னகரவோ அல்லது மீள் இணையவோ சந்தர்ப்பமளிக்கும்.
 பலருக்கும் சந்தேகம் ஏற்படலாம் ஏன் களமுனைகளிலும் இவ்வாறு ஒழுங்குமுளையின்றி மிதிவெடிகளைப் புதைக்கலாமே! என்று... ஆனால் சூன்ய பிரதேசத்தில் இவ்வாறான ஒழுங்கற்ற முறையில் புதைக்கப்படும் மிதிவெடிகளால் சொந்த தரப்புக்கே ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளது. எதிரியின் நடவடிக்கைகளை கண்காணிக்க எல்லைக்கு வெளியே செல்லும் போர்வீரர்கள் பாதிக்கப்படலாம் அல்லது வலிந்த தாக்குதலில் ஈடுபடும் பொழுது திட்டமிடல்களை மேற்கொள்ள மூடியாது சிரமங்களை ஏற்படுத்தலாம்.

மிதிவெடியகற்றல் முறைகள்

இன்று உலகின்பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வகையான மனிதநேய கண்ணிவெடியகற்றும் தொண்டுநிறுவனங்கள் இயங்கிவருகின்றன. இவையனைத்தும் தமது நிதி மற்றும் தொழில்நுட்ப நிலமைகளிற்கு அமைவாக வேறுபட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றன. 

இவற்றில் பொதுவாக பலநிறுவனங்களும் பயன்படுத்தும் கண்ணிவெடியகற்றும் முறைகளாக,

01. மனிதவலுவிலான தொழில்நுட்பம் (Manual Demining Method):



Deminer working with Rake
மதிவெடி அகற்றுனர் கிழறி ஒன்றின்
மூலம் மதிவெடியகற்றல
Deminer with Metal mine detector
மதிவெடி அகற்றுனர் உலோகவுணர் 
கருவியொன்றின் மூலம் 
மதிவெடியகற்றல்
இதில், உலோகவுணர் கருவியைக்(Metal Mine Detector) கொண்டு மதிவெடியகற்றல் மற்றும் சிறு குப்பைவாரி (Rake) போன்ற ஒன்றினால் நிலத்தை கிழறி மதிவெடிகளை அகற்றும முறையும் பிரதானமானவையாகும்.

02. மதிவெடி அடையாளப்படுத்தும் நாய் (Mines Detection Dog): நாய்களின் மோப்ப சக்தியின் உதவியுடன் இதற்கென பயிற்றுவிக்கப்பட்ட நாய்களைக் கொண்டு மதிவெடிகளை அகற்றும் முறையாகும். 

03. இயந்திர பயன்பாட்டு முறை (Mechanical Deming) :
மிதிவெடியகற்றும் இயந்திரம் 
 இம்முறையில் தொலை இயக்கி மூலம் இயக்கப்படும் இயந்திரங்கள் மூலம் புவி மேற்பரப்பில் அழுத்தங்களை பிரயோகிப்பதன் மூலம் மிதிவெடிகளை வெடிக்கவைக்கும் முறையாகும். இம்முறை வாகன எதிர்ப்புக் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிப்பிரதேசங்களில் பயன்படுத்த முடியாத ஒன்றாகும். அத்துடன் இதன் மூலமாக 100 சதவீத உத்தரவாதத்தை வழங்க முடியாதும் முக்கியமானதாகும் பொதுவாக இம்முறை கண்ணிவெடி மற்றைய முறைகளால் அகற்றப்பட்ட பின்னர் அதனை உறுதிப்படுத்துவதற்கே (Verification)  பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.

மனிதநேய கண்ணிவெடியகற்றலில் வெடிபொருள்களை வகைப்படுத்தல்

தொழில்நுட்ப அறிக்கைகள் தயாரிப்பதற்காகவும் பல்வேறு ஆய்வுகளிற்காகவும் மனிதெநேய வெடிபொருள் அகற்றல் துறையில் வெடிபொருள்களை வகைப்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகின்றது. இதனடிப்படையில் யுத்தம் ஒன்றின் பின்னரான எச்சங்கள்( Explosive Remnants of War ) எனும் வகையினுள் சகல வெடிபொருட்களும் உள்ளடக்கப்படுகின்றன.

இவை பல்வேறு வகைகளில் பலராலும் வகைப்படுத்தப்பட்டாலும் பொதுவாக

பலராலும் பயன்படுத்தப்படுவது இருவகையான வகைப்படுத்தல்களாகும். முதல் முறையில் அவை பயன்படுதப்படும் முறையில் வகைப்படுத்தப்படுகின்றது. அதாவது, எம் முறையில் வெடிபொருளானது எதிரிக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றது என்பதிலாகும்.
இவற்றில் நாம் நான்கு பெரும் பிரிவுகளில் அனைத்து வெடிபொருள்களையும் உள்ளடக்க முடியும்.
அவையாவன
  • நிலையாக பொருத்தப்பட்டது (Placed)
  • எறியப்பட்டது (Thrown)
  • உந்தியெறியப்பட்டது (Projected)
  • ERW Classification
  • கைவினை வெடிகுண்டுகள்

முதல் வகை வெடிபொருட்களில் மதிவெடிகள் வாகன எதிர்ப்பு கண்ணிவெடிகள் மற்றும் கிளைமோர் கண்ணிவெடிகள் என்பன உள்ளடங்கும். இவற்றில் இருவகையுண்டு. அவையாவன 
  • வெடிப்பின் மூலம் எதிரிக்கு பாதிப்பை ஏற்படுத்துபவை. 
  • வெடிப்பின் மூலம் சிதறல்களை வெளியிட்டு அச்சிதறல்கள் மூலம் பாதிப்பை ஏற்படுத்துவன. 
சாதாரணமாக மிதிவெடிகள் மற்றும் வாகன எதிர்ப்புக் கண்ணிவெடிகள் முதல் வகையினுள்ளும் கிளைமோர்க் கண்ணிவெடிகள் இரண்டாவது வகையிலும் அடங்கும்.

எறியப்பட்ட வெடிபொருள்கள் எனப்படும் பொழுது, பொதுவாக வெற்றுக் கைகளால் எறியப்படும் கையெறிகுண்டுகள் இவ்வகையினுள் உள்ளடங்கும்

உந்தியெறியப்பட்ட வெடிபொருட்கள் வகையினுள், மோட்டார் எறிகணைகள் மற்றும் ஆட்டிலறி எறிகணைகள் ஆர் பி ஜி குண்டுகள் போன்ற உந்துவிசையைப் பயன்படுத்தி ஏவப்படும் வெடிபொருட்கள் உள்ளடங்கும்.

நான்காவது வகையான கைவினை வெடிபொருட்களினுள்,  பல்வேறு வெடிபொருட்களிலும் இருந்துதொகுக்கப்பட்ட சாதாரண இராணுவப் பயன்பாட்டில் இல்லாத வெடிபொருட்கள் உள்ளடங்கும். இவற்றின் வெடிப்பு பொறிமுறைகள் வழமைக்கு மாறாக மாற்றப்பட்டிருக்கும். இவை பெரும்பாலும் அரச எதிர்ப்புக் குழுக்களாலேயே உள்ளுரிலே வடிவமைக்கப்பட்டிருப்பதுடன் இவற்றிற்கு நிலையான வெடிப்பு பொறிமுறை இருக்காது.

இவ்வாறு பாவனைக்குட்படுத்தப்படும் முறையில் வகைப்படுத்தாது வெடிபொருளின் தன்மையில் வகைப்படுத்தப்படுவது. இம்முறையில் வெடிபொருட்கள் அனைத்தும் இரு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படும்.
  • கண்ணிவெடிகள்
  • வெடிக்காத வெடிபொருள்கள்
கண்ணிவெடிகள் எனும் வகையினுள் அனைத்து விதமான மிதிவெடிகள் வாகன எதிர்ப்பு கண்ணிவெடிகள், தனிநபருக்கு / வாகனங்களிற்கு எதிரான வெடிபொருள்கள், கிளைமோர் கண்ணிவெடிகள் என்பன உள்ளடங்கும்

வெடிக்காத வெடிபொருள்கள் எனும் பொழுது கண்ணிவெடிகள் தவிர்ந்த அனைத்து வெடிபொருள்களும் உள்ளடங்கும். இங்கு வெடிபொருள் எனக் குறிப்பிடப்படும் இடத்து வெடிமருந்து தடவப்பட்ட உலோகப்பொருட்கள் அனைத்தையும் குறித்து நிற்கும்.